'ஞாபகமில்லை" என வாக்குமூலம் வழங்கிய கோட்டாபய..

லலித் குகன் வழக்கில் வாக்குமூலம் வழங்கிய கோட்டாபய ராஜபக்ஸ

by Staff Writer 28-11-2026 | 11:41 AM

COLOMBO (News 1st)  2011ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பான வழக்கில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஸவிடம் நேற்று (27) வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இருந்து நிகழ்நிலை ஊடாக நேற்று (27)சாட்சியமளித்தார்.

சாட்சி விசாரணையின் போது கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்குத் 'தெரியாது', 'ஞாபகமில்லை', 'விளக்கமில்லை' என்ற பதில்களையே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வழங்கியுள்ளார்.​

2011 ஆம் ஆண்டு டிசம்பர் 09 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பில் அவர்களது உறவினர்களால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பில் சாட்சியமளிக்குமாறு 2019 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் உயிர் அச்சுறுத்தல் இருப்பதால்,  யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி சாட்சியமளிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஸ, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இருந்து சாட்சியமளித்தார்.

இந்த நிலையில், மேலதிக சாட்சி விசாரணையை அடுத்த வருடம் பெப்ரவரி 12 ஆம் திகதி வரை ஒத்திவைத்து யாழ்ப்பாணம் நீதவான் எஸ். லெனின் குமார் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் தவணையிலும் இவ்வாறு  நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.