.webp)
-561733.jpg)
COLOMBO (News 1st) நாமல் ராஜபக்ஸவிற்கு எதிரான எயார்பஸ் கொள்வனவு தொடர்பான இலஞ்ச, ஊழல் வழக்கின் சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ள, குறித்த விசாரணைகளை முன்னெடுத்த பிரான்ஸை சேர்ந்த தடயவியல் விசாரணை நிபுணர் யூசர் கலீல் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
யூசர் கலீல் இந்த வழக்கில் சாட்சியாளராகப் பெயரிடப்பட்டுள்ளமையை இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவும் உறுதிப்படுத்தியுள்ளது.
சுமார் 4 ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணைகளின் பின்னர் எயார்பஸ் விமானக் கொள்வனவு ஒப்பந்தங்களில் இடம்பெற்ற இலஞ்ச, ஊழல்கள் தொடர்பான பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது தொடர்பில் 2020ஆம் ஆண்டு பிரித்தானியாவின் பாரிய மோசடிகள் விசாரணை அலுவலகம் வெளியிட்ட தகவல்களுக்கு அமைய 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக 10 விமானங்களை கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்ட ஒப்பந்தத்தில் இலஞ்சம் வழங்கப்பட்டமையும் அம்பலமானது.
குறித்த கொடுக்கல் வாங்கலுக்காக 16.84 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சமாக இணக்கம் காணப்பட்டிருந்ததுடன் அதில் 2 மில்லியன் டொலர் ஏற்கனவே பெற்றுக்கொள்ளப்பட்டிருந்ததாகவும் தெரியவந்தது.
அப்போதைய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவிக்கு சொந்தமான, புரூனையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமொன்றும் இந்தக் கொடுக்கல் வாங்கலில் இடைத்தரகராக செயற்பட்டுள்ளதுடன், அந்த நிறுவனத்தின் வங்கி கணக்கின் ஊடாகவே இலஞ்சபணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட பணத்தில் சுமார் 8 இலட்சம் அமெரிக்க டொலர் நாமல் ராஜபக்ஸவுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தற்போது மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கிற்கு அடிப்படையாக அமைந்தது பிரான்ஸ், பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து முன்னெடுத்த நீண்டகால சர்வதேச விசாரணையாகும்.
இதன்போது மேலும் பல தரப்பினருக்கு இலஞ்சம் வழங்கப்பட்ட சம்பவங்களும் அம்பலமானதுடன், இறுதியில் எயார்பஸ் நிறுவனம் 3.6 பில்லியன் யூரோ அபராதம் செலுத்துவதற்கும் இணக்கம் தெரிவித்தது.
2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டது.
உலக வரலாற்றில் முதன்முறையாக பிரான்ஸின் தேசிய நிதிக் குற்றவியல் வழக்கு தொடுநர் அலுவலகம், பிரித்தானியாவின் பாரிய மோசடிகள் விசாரணை அலுவலகம், அமெரிக்க நீதித் திணைக்களம், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஆகிய 4 தரப்பினரும் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
இந்த பாரிய சர்வதேச விசாரணையின்போது, தடயவியல் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட விசாரணை அணுகுமுறைகளை திட்டமிடுதல், சட்ட இணக்கப்பாட்டு அபாயங்களை மதிப்பீடு செய்தல், தரவுக் கட்டுப்பாட்டு உத்திகளை வகுத்தல்,இறுதி அபராதத் தொகையைக் கணக்கிடுதல் உள்ளிட்ட பணிகளுக்காக FRA எனப்படும் Ference Forensic Risk Alliance நிறுவனத்தின் நிபுணத்துவ உதவி பெற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணைச் செயற்பாட்டிற்கு அந்த நிறுவனத்தின் பிரான்ஸ் அலுவலக தலைவர் யூசர் கலீல் தலைமை தாங்கியிருந்தார்.
இந்த நிலையில், நாமல் ராஜபக்ஸவுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் யூசர் கலீல் சாட்சியாளராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக அவர் இலங்கைக்கு வருவதற்கு தயாராகி வருவதை சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
