.webp)
-561739.jpg)
COLOMBO (News 1st) 1983 கறுப்பு ஜூலை துயரச் சம்பவம் மற்றும் அதன் பாதிப்புகள் தொடர்பில், முழுமையான ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையிலான 11 பேர் கொண்ட பாராளுமன்ற தெரிவுக்குழு பெயரிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்ரமரத்ன பாராளுமன்றத்தில் இன்று (28) அறிவித்தார்.
தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தல் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குதல் தொடர்பான முன்மொழிவுகளையும் பரிந்துரைகளையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக இந்தப் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தெரிவுக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நானாயக்கார, பிரதி அமைச்சர்களான எரங்க குணசேகர, முனீர் முளப்பர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், செல்வம் அடைக்கலநாதன், ஞானமுத்து ஸ்ரீநேசன், கிருஷ்ணன் கலைச்செல்வி, தனுர திஸாநாயக்க, சுரங்க ரத்நாயக்க, சட்டத்தரணி ஹிருணி விஜேசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
