நியூஸ் ஃபெஸ்ட் செய்தியாளர் இஃபாம் மொஹமட் காலமானார்

நியூஸ் ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் இஃபாம் மொஹமட் காலமானார்..

by Staff Writer 16-11-2026 | 3:49 PM

Colombo (News 1st) தொலைதூர பகுதியிலுள்ள மக்களுடன் வாழ்ந்து, அவர்களின் துயரங்களையும் கவலைகளையும் தலைநகரின் செய்தி அறையிலுள்ள சக பணியாளர்களிடம் சேர்த்து, தகவலறியும் உரிமைக்காக ஒப்பற்ற பணியாற்றிய இஃபாம் மொஹமட் இன்று(16) காலமானார்.

இஃபாம் அனுராதபுர பிராந்திய செய்தியாளர்.

பிதுல் ஹமீட் மொஹமட் இஃபாம், 1982 பெப்ரவரி 26ஆம் திகதி அனுராதபுரம் - நொச்சியாகம பகுதியில் பிறந்தார்.

நொச்சியாகம அல் ஹிக்மா மகா வித்தியாலயத்திலும் அனுராதபுரம் சாஹிரா கல்லூரியிலும் அவர் கல்வி பயின்றார்.

நியூஸ் ஃபெஸ்ட்டின் அனுராதபுரம் பிராந்திய செய்தியாளராக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய இஃபாம், குளக்கட்டுக்கள் சூழ்ந்த இராச்சியத்தின் அன்பான மக்களின் நெருங்கிய நண்பனாக கடமையை செவ்வனே நிறைவேற்றினார்.

14 வருடங்களுக்கும் அதிகமாக நியூஸ் ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளராக பணியாற்றியுள்ள அவர், செய்தி அறிக்கையிடலுடன் மாத்திரம் நின்றுவிடாமல், நியூஸ் ஃபெஸ்ட் உள்ளிட்ட சிரச ஊடக வலையமைப்பின் பல்வேறு பொது திட்டங்களுக்கு அவர் முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளார்.

'கம்மெத்த' அவற்றுள் முதன்மையானதாகும்.

கிராமங்கள் தோறும் பரந்தளவில் முன்னெடுக்கப்பட்ட கம்மெத்த திட்டத்தின் ஆரம்பம் முதலே, கையில் கமராவை கொண்டு கரடுமுரடான பாதைகளில் நடந்து சென்று கிராம பிரச்சினைகளை தீர்க்க தீவிரமாக அவர் ஆற்றிய சேவையை எவராலும் மறக்க முடியாது.