ஸ்ரீலங்கன் விமான சேவை அபிவிருத்திக்கு திட்டம்

ஸ்ரீலங்கன் விமான சேவையை இலாபகரமான நிலைமைக்கு கொண்டுவர ஐந்தாண்டு திட்டம்

by Nadeeshan Meedin 15-11-2026 | 1:31 PM

Colombo (News 1st) ஸ்ரீலங்கன் விமான சேவையை இலாபகரமான நிலைமைக்கு கொண்டுவருவதற்காக ஐந்தாண்டு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடிய உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவில் விவாதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவை முகங்கொடுத்துள்ள நிதி நெருக்கடி, அதிகளவான விமான தாமதங்கள், கடன் சுமை மற்றும் புதிய விமானங்களைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள கொள்முதல் தாமதங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போதுள்ள 23 விமானங்களைக் கொண்ட தொகுதியானது போதுமானதாக இல்லாமை மற்றும் அந்த விமானங்கள் சுமார் 12 ஆண்டுகள் பழைமையானவை என்பதால், பயணங்களைப் பாதிக்கும் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் தாமதங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

விமானமொன்றில் தொழில்நுட்பக் கோளாறு அல்லது வேறு காரணங்களால் தாமதம் ஏற்படும் போது மாற்று விமானங்களை ஈடுபடுத்துவதிலுள்ள வரையறைகள் காரணமாக ஒட்டுமொத்த விமான சேவை வலையமைப்பிற்கும் தாக்கம் ஏற்படுவதாக இதன்போது வெளிக்கொணரப்பட்டுள்ளது.

விமானங்களைப் பெற்றுக்கொள்வதற்காக கடந்த காலத்தில் செயற்படுத்தப்பட்ட சாதாரண கொள்முதல் வழிமுறைகள் தோல்வியடைந்தமை மற்றும் அது தொடர்பான நீண்ட கால தாமதங்கள் குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கு தீர்வாக விமானங்களையும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களையும் கொள்வனவு செய்வதற்காக விசேட கொள்முதல் வழிகாட்டி தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதனை வர்த்தமானியில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் குழுவில் வௌிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், ஜூன் மாதமளவில் புதிய குறுகிய உடல் வடிவமைப்பை கொண்ட  விமானமொன்றையும், பரந்த உடல் வடிவமைப்பை கொண்ட 02 விமானங்களையும் இணைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

2029 அளவில் விமானத் தொகுதியை குறைந்தபட்சம் 29 விமானங்களாக உயர்த்துவது ஐந்தாண்டு திட்டத்தின் இலக்காகும் என குழு முன்னிலையில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதற்கமைய, எதிர்வரும் 02 அல்லது 03 ஆண்டுகளுக்குள் ஸ்ரீலங்கன் விமான சேவையை செலவுகளை ஈடுசெய்யக்கூடிய நிலைமைக்கு கொண்டுவருவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய விரிவான அறிக்கையை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றம் மற்றும் அமைச்சிற்கு சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குழுவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சின் இடைக்கால அரச நிதி நிலை பற்றிய அறிக்கைக்கமைய, 2026/2027 நிதியாண்டின் முதல் 3 மாதங்களில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு ஏற்பட்டுள்ள நட்டம் 35 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும்.