.webp)
-561602.jpg)
COLOMBO (News 1st) உலகளாவிய ரீதியில் Microsoft 365 செயலிகளில் ஏற்பட்ட தடை, சைபர் தாக்குதலால் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் Microsoft நிறுவனத்தின் செயலிகள் முடங்கியமைக்கு எந்தவொரு தீய நோக்கிலான செயலோ அல்லது சைபர் தாக்குதலோ காரணம் அல்லவென அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமது உட்கட்டமைப்பின் ஒரு பகுதி "அதிகரிக்கப்பட்ட பணிச்சுமையை" சந்தித்து வருவதாகவும், இதனாலேயே இணைப்பு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும்
நிறுவனத்தின் நிறைவேற்று சபை உதவித் தலைவர்களில் ஒருவரான சார்ல்ஸ் லமானா எக்ஸ் தளத்தில் பதிவொன்றினூடாக இதனை அறிவித்துள்ளார்.
கணினி மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசொஃப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான 'டீம்ஸ்' (Teams), மின்னஞ்சல் சேவையான 'அவுட்லுக்' (Outlook) மற்றும் அவற்றின் செயற்கை நுண்ணறிவு செயலியான 'கோபைலட்' (Copilot) ஆகிய செயலிகளின் இயக்கம், 12 மணித்தியாலத்திற்கும் அதிக காலம் தொடர்ந்தும் தடைபட்டுக் காணப்படுகிறது.
கண்காணிப்பு வலைத்தளங்களின் தரவுகளின் பிரகாரம், கடந்த 8 மணித்தியாலங்களுக்குள் 74 நாடுகளில் உள்ள இலட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் இந்த சேவை முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் சில அரச நிறுவனங்களின் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Microsoft 365 செயலிகளை உலகளாவிய ரீதியில் 43 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர்.
30 இலட்சம் முதல் 40 இலட்சம் வரையான நிறுவனங்கள், Microsoft 365-ஐப் பயன்படுத்துவதாக தரவு கண்காணிப்பு தளங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள தடையை சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துவருவதாக Microsoft நிறுவனம் தெரிவித்துள்ளது.
"பாதிப்பை குறைப்பதற்கும்", சேவைகளை "இயல்பு நிலைக்கு" கொண்டுவருவதற்கும் "பல வழிமுறைகளில் ஈடுபட்டுள்ளதாக" நிறுவனம் கூறியுள்ளது.
