டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

by Staff Writer 09-11-2026 | 9:51 AM

COLOMBO (News 1st) வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 1,07,651 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நவம்பர் மாதத்தின் முதல் 07 நாட்களில் மாத்திரம் 1399 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

ஜூலை மாதத்தில் மாத்திரம் நாட்டில் 29,964 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கம்பஹா, கொழும்பு மற்றும் கண்டி மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தற்போது அடையாளங் காணப்பட்டுள்ள அதிக ஆபத்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை 37 ஆகும்.

டெங்கு காரணமாக இந்த வருடத்தினுள் 81 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு இன்று (09) முதல் விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் டொக்டர் கபில கண்ணங்கர தெரிவித்துள்ளார்.

சுமார் 130 பிரிவுகளில் நுளம்பு குடம்பிகளின் அடர்த்தி துரிதமாக அதிகரித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.  

நுளம்பு பெருகும் வீதம் அதிகரித்துள்ளமையினால், நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாக அவர் கூறினார்.

இந்த நிலைமையை கருத்திற்கொண்டு சுகாதார அமைச்சு, 'க்ளீன் ஸ்ரீலங்கா' செயலகம், முப்படையினர், பொலிஸார் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியன இணைந்து விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் டொக்டர் கபில கண்ணங்கர தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகள், அரச நிறுவனங்கள், பொது இடங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பல இடங்களிலும் நுளம்புகள் முட்டையிட்டு பெருகும் அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அனைவரும் தமது சுற்றுப்புற சூழலைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்தடுத்த நாட்களில் டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளமையினால், இந்த வேலைத்திட்டத்திற்கு அனைவரையும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.