.webp)

Colombo (News 1st) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நோர்வே சென்றுள்ள போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட குழுவினர், அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் கம்சாயினி குணரத்தினத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
சமூக, இன மற்றும் புவியியல் பின்னணிகளைப் பொருட்படுத்தாமல் ஒட்டுமொத்த மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக நோர்வே போக்குவரத்து அமைச்சர் கம்சாயினி குணரத்தினம் தெரிவித்தார்.
அந்நாட்டு போக்குவரத்து அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் அதிகரித்துவரும் வீதி விபத்துகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறைக்கு மாறுதல், தொழிலாளர்கள் சுரண்டப்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டதாக கம்சாயினி குணரத்தினம் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நகர் மற்றும் கிராமப்புறங்களில் மக்களின் போக்குவரத்து பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பிலும் இருநாடுகளினதும் போக்குவரத்து அமைச்சர்கள் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கை போன்ற நாட்டில் குறிப்பாக உள்நாட்டு போரின் காயங்கள் இன்றும் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக அமைச்சர் கம்சாயினி குணரத்தினம் தெரிவித்தார்.
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முக்கிய பணிகள், காலநிலை மற்றும் போக்குவரத்து சவால்களுக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளுக்காக இலங்கை அமைச்சர் உள்ளிட்ட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்வதாகவும் அவரது முகநூல் பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நோர்வேயின் புதிய போக்குவரத்து அமைச்சராக பதவியேற்றுள்ள கம்சாயினி குணரத்தினம் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
