54 பேருக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பிக்குகள், 11 அரசியல்வாதிகள், 13 சிவில் சமூக உறுப்பினர்களுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு

by Staff Writer 17-10-2026 | 4:26 PM

COLOMBO (News 1st) - நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மகா சங்கத்தினர் உள்ளிட்ட குழுவினர் தற்போது கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவுக்கு அருகில் தங்கியுள்ளனர். 

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள உலபனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 30 பிக்குகள், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில உள்ளிட்ட 11 அரசியல்வாதிகள் மற்றும் 13 சிவில் சமூக உறுப்பினர்கள் உள்ளிட்ட 54 பேர் ஜனாதிபதி செயலக வளாகத்தில் தங்கியிருப்பதைத் தடை செய்து கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன நேற்று (16) காலை உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி செயலக வளாகத்திலிருந்து வெளியேறி, கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவுக்கு அருகில் தங்கியுள்ளனர்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரை உடனடியாக விடுதலை செய்யுமாறு தெரிவித்து பொதுஜன பெரமுன, சர்வஜன அதிகாரம்,  ஐக்கிய தேசியக்கட்சி,  விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட  மகாநாயக்க தேரர்களை முன்னிலைப்படுத்திய பேரணியில் கலந்து கொண்ட சிலர் ஜனாதிபதி செயலக வளாகத்தில் தங்கியிருந்தனர்.

நேற்று (16) காலை ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு மேலும் சிலர் வருகை தந்தனர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் அனுராதா யஹம்பத், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார  உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு வருகை தந்திருந்தனர்.

ஆர்ப்பாட்டம் தொடர்பில் நேற்று காலை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் கோட்டை பொலிஸார் விடயங்களை முன்வைத்தனர்.

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறும், அவரை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறைச்சாலை சீருடையில் ஆஜர்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கண்டியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் வியாழக்கிழமை கொழும்பை வந்தடைந்ததாக கோட்டை பொலிஸார் நீதிமன்றத்துக்கு அறிவித்தனர்.

பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்காக அரசியலமைப்பினால் தனிநபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை போராட்டக்காரர்களுக்கும் வழங்கப்பட்டதாகத் தெரிவித்த கோட்டை பொலிஸார், அரசியலமைப்பின் சில விதிகளை மீறி  போராட்டக்காரர்கள் செயற்படுவதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் வியாழக்கிழமை (15) ஒன்றுகூடியதன் பின்னர், ஜனாதிபதியின் செயலாளரும் ஜனாதிபதி செயலகத்தின் தலைமை அதிகாரியும் அவர்களைச் சந்தித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

போராட்டக்காரர்களின் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், ஜனாதிபதி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

அவ்வாறான பின்புலத்தில் தற்போது போராட்டக்காரர்கள் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாகவும் ஜனாதிபதி செயலகம் அமைந்துள்ள அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, பொலிஸாரின் கடமைக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படுவதாகவும் பொலிஸார் மன்றுக்கு விடயங்களை தௌிவுபடுத்தினர்.

விடயங்களை ஆராய்ந்த நீதவான் போராட்டக்காரர்களின் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு செல்லப்பட்டுள்ளதாகவும் அதற்குத் தீர்வொன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அவர்கள் செயற்படுவதாக  பொலிஸார் முன்வைத்த விடயங்களைக் கருத்தில் கொண்டதுடன் ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட குறித்த பகுதியில் போராட்டக்காரர்கள் தங்கியிருப்பதைத் தடுக்கும் வகையில் தடையுத்தரவையும் பிறப்பித்தார். 

54 பேருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

18 சிவில் உறுப்பினர்களும் இந்த உத்தரவுக்கு உட்பட்டுள்ளனர்.

பொலிஸார் நேற்று பகல் ஜனாதிபதி செயலக வளாகத்துக்கு வருகை தந்து தடையுத்தரவை வாசித்தனர்.

நீதிமன்ற தடையுத்தரவு வாசிக்கப்பட்டதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது கொட்டகைகளை அகற்றி, அங்கிருந்து வௌியேறினர்.