.webp)

Colombo (News 1st) சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, குருணாகல் மாவட்டங்களின் சில இடங்களில் 75 மில்லிமீட்டருருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேல் மாகாணம் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் ஓரளவு மழை பெய்யக்கூடும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனிடையே, தெதுரு ஓயாவின் 02 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெதுரு ஓயாவின் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென திணைக்களத்தின் நீரியல் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர், பொறியியலாளர் எல்.எஸ்.சூரியபண்டார தெரிவித்தார்.
இதனிடையே, நிலவும் மழையுடனான வானிலையால் 08 மாவட்டங்களிலுள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் மத்துரட்ட, வலப்பனை, ஹங்குராங்கெத்த, நில்தண்டாஹின்ன மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை, கொலொன்ன பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
