அனோஜனின் தண்டனைக்கு எதிராக சவுதியில் மேன்முறையீடு

அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக சவுதி உயர்நீதிமன்றில் மேன்முறையீடு

by Staff Writer 10-10-2026 | 9:29 AM

Colombo (News 1st) அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை தளர்த்துவதற்காக சவுதி அரேபிய உயர்நீதிமன்றத்தில் இன்று (10) மேன்முறையீடு தாக்கல் செய்யப்படவுள்ளது.
இது தொடர்பில் சவூதி அரேபியாவிலுள்ள சட்டத்தரணிகள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளுடன் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி அசாத் நவாவி, ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரபெரும மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை சவூதி அரேபியா சென்றனர்.
மேன்முறையீட்டை தாக்கல் செய்வது குறித்து, ஜனாதிபதி சட்டத்தரணிகள் நேற்றைய தினமும் (09) சவுதி அரேபிய சட்டதரணிகள் சங்கங்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.
உயர்நீதிமன்ற மேன்முறையீட்டின் ஊடாக சாதகமான பதில் கிடைக்காத பட்சத்தில், சவூதி அரேபிய மன்னரிடமும் மேன்முறையீடு தாக்கல் செய்யப்படவுள்ளது.
அனோஜன் சிவராசாவை விடுவிப்பதற்குத் தேவையான அரசாங்கத் தலையீட்டை மேற்கொள்ளுமாறு கோரி, மகாநாயக்க சங்கங்கள் உள்ளிட்ட சர்வமதத் தலைவர்கள் அண்மையில் ஜனாதிபதியிடம் மனுவொன்றை கையளித்திருந்தனர்.
சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கருத்து தொடர்பில் சவூதி அரேபியாவின் அல்-அஹ்ஸா (Al-Ahsa) குற்றவியல் நீதிமன்றம், அனோஜன் சிவராசாவுக்கு 05 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 03 மில்லியன் சவூதி அரேபிய ரியால் அபராதமும் விதித்திருந்தது.
கல்முனை - நற்பிட்டிமுனை பகுதியைச் சேர்ந்த சிவராசா அனோஜன் சவுதி அரேபியாவுக்கு இதற்கு முன்னர் 09 மாதங்களுக்கு முன்னர் தொழில் நிமித்தம் சவுதி அரேபியாவுக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலைக்கான இராஜதந்திர ரீதியான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து வருவதாக வௌிவிவகார மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.