.webp)

Colombo (News 1st) ஊழல் மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஸ உள்ளிட்ட பிரதிவாதிகள் மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(08 உத்தரவிட்டது.
சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகை தொடர்பில் பிரதிவாதிகள் முன்வைத்த அடிப்படை ஆட்சேபனையை நிராகரித்து நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் தாக்கல் செய்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு அமைய வழக்கு விசாரணையை முன்கொண்டு செல்வதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்.
குறித்த குற்றச்சாட்டுகளில் தாம் நிரபராதி என பிரதிவாதிகள் தெரிவித்த பின்னர், வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் ஆரம்பமானது.
2023 நவம்பர் 27 முதல் 2024 மே 29 வரையான காலப்பகுதிக்குள் குறித்த குற்றம் இழைக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பிரதிவாதிகளுக்கு எதிராக 10 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், வழக்கு விசாரணையின் போது 30 நபர்கள் சாட்சிகளாகவும் 38 ஆவணங்கள் வழக்கு பொருட்களாகவும் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இந்த வழக்கில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஸ, கொழும்பு இழப்பீட்டு அலுவலகத்தின் பதில் பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றிய சேபாலிகா சமன் குமாரி மற்றும் கீர்த்தி பண்டார கொடகம ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
