.webp)

Colombo (news 1st) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அழைப்பை ஏற்று, சீன ஜனாதிபதி Xi Jinping அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த 11 ஆண்டுகளில் சீன ஜனாதிபதியொருவர் வொஷிங்டனுக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும்.
கடந்த மே மாதம் அமெரிக்க ஜனாதிபதி சீனாவிற்கு விஜயம் செய்திருந்த நிலையில், 06 மாத இடைவெளிக்குள் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது உலகளாவிய ரீதியில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வழமையான இராஜதந்திர மரபுகளின்றி அமெரிக்க ஜனாதிபதியும் முதல் பெண்மணியும் நேரில் சென்று சீன ஜனாதிபதிக்கு சிவப்பு கம்பள வரவேற்பளித்துள்ளனர்.
இன்று வெள்ளை மாளிகையின் Rose Garden-இல் இராணுவ அணிவகுப்புடன் கூடிய வரவேற்பை தொடர்ந்து, இருநாட்டு தலைவர்களுக்கும் இடையிலான உயர்மட்ட உச்சிமாநாடு நடைபெறுகிறது.
அத்துடன் மாலை வேளையில் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்கும் சிறப்பு அரச விருந்தும் அளிக்கப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சீன ஜனாதிபதியின் விஜயத்தை தொடர்ந்து, எதிர்வரும் நவம்பர் மாதத்துடன் காலாவதியாகவிருந்த அமெரிக்க - சீன வர்த்தக ஒப்பந்தம் மேலும் 02 மாதங்களுக்கு நீடிக்கப்படுவதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசன்ட் அறிவித்துள்ளார்.
அத்துடன், இருநாடுகளுக்கு இடையே விரிவான மற்றும் பாரியளவிலான புதிய வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான சீனாவின் முன்மொழிவை பரிசீலிக்க வொஷிங்டன் தயாராகவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இருநாட்டு தலைவர்களுக்கிடையிலான உயர்மட்ட உச்சிமாநாட்டிற்கு சில மணிநேரங்களுக்கு முன்பாகவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
