.webp)

Colombo (News 1st) இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு பாரியளவிலான விமானங்களை கொள்வனவு செய்யும் போது 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பான விசாரணைகளுக்காக நாமல் ராஜபக்ஸவுக்கு ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது.
வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான நாமல் ராஜபக்ஸவிடம் 5 மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் அவர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு பாரியளவிலான விமானங்களை கொள்வனவு செய்யும் போது சிங்கப்பூரிலுள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டட் (Standard Chartered) வங்கியின் பிஸ் சொல்யூஷன்ஸ் (Biz Solutions) NIC கணக்கிற்கு இலஞ்சமாக 14 இலட்சத்து 54,651 யூரோ கிடைத்துள்ளதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதிலிருந்து 8 இலட்சம் அமெரிக்க டொலர்களை, இலங்கையைச் சேர்ந்த வர்த்தகரொருவருக்குச் சொந்தமான சப்ரே விஷன் ஹோல்டிங்ஸ் (Sabre Vision Holdings) நிறுவனத்தின் பெயரில் சிங்கப்பூரில் அமைந்துள்ள வங்கிக் கணக்கொன்றில் வைப்புச் செய்து, அந்தத் தொகைக்கு நிகராக 100 மில்லியன் ரூபாவை குறித்த இலங்கை வர்த்தகரிடமிருந்து இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டதாக நாமல் ராஜபக்ஸ மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்துடன் தொடர்புடைய இலங்கை வர்த்தகரின் வாக்குமூலம் மற்றும் பிரான்ஸின் ஏயார்பஸ் நிறுவன அதிகாரிகள், ஆணைக்குழுவில் முன்னிலையாகி வழங்கிய வாக்குமூலங்கள், மேலும் இது தொடர்பில் திரட்டப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஏனைய தகவல்களின் அடிப்படையிலேயே நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
