முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கைது

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கைது

by Staff Writer 31-08-2026 | 3:31 PM

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று(31) கைது செய்யப்பட்டார்.

இன்று இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த நிலையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மற்றும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய, அவர் இன்று காலை 8.15 அளவில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.

இதற்கு முன்னர் 04 தடவைகள் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் முன்னிலையாகியிருக்கவில்லை.

தேசிய லொத்தர் சபைக்கு அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு புறம்பாக 05 அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக்கொண்டு அவர்களை தனது தனிப்பட்ட ஊழியர் குழாத்தில் இணைத்துக்கொண்டமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கமையவே ரவி கருணாநாயக்கவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று முன்தினம் பத்தரமுல்லை, ரஜமல்வத்த வீதியில் அமைந்துள்ள ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு சென்று தேடுதலை மேற்கொண்டிருந்தனர். 

எனினும், அந்த சந்தர்ப்பத்தில் அவர் வீட்டில் இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவரான ஷர்மிளா பெரேரா கைது செய்யப்பட்டு, கடந்த ஜூன் 30ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.