போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குறித்து விசாரணை

நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட 25 குற்றவாளிகளின் சொத்துக்கள் தொடர்பில் விரிவான விசாரணை

by Staff Writer 19-08-2026 | 10:27 AM

Colombo (News 1st) வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள மற்றும் நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் 25 குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்கள் தொடர்பில் தற்போது விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பணியகத்தின் ஊடாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.


அண்மையில் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் என்பவருக்கு சொந்தமான சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளும் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அவரது மகனின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்ட சில சொத்துக்களுக்கு எதிராக அண்மையில் தடை உத்தரவு பெறப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.


அத்துடன் , குற்றவாளிகளான கொஸ்கொட சுஜீ, ரத்கம விதுர, இரத்மலானை சைமா மற்றும் கஞ்சிபானி இம்ரான் ஆகியோரின் சொத்துக்கள் தொடர்பிலும் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 


சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பிலும் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.