சிவநேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்ந்தும் விளக்கமறியலில்..

by Staff Writer 18-08-2026 | 4:13 PM

Colombo (News 1st) பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 


மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதிபதி மதூஜலா கேதீஸ்வரன் முன்னிலையில் இன்று (18) நிகழ்நிலையூடாக ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே, விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டது. 


கிழக்கு மாகாணத்தில் 2008 ஆம் ஆண்டில் இடம்பெற்ற 05 ஆட்கொலை சம்பவங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 


2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09 ஆம் திகதி முருகன் கோவிலுக்கு அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் இருவர் T-65 ரக துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை, 2008 மே 22ஆம் திகதி காத்தான்குடி பிரதான வீதியில் இருவர் சுட்டு கொலை செய்யப்பட்டமை, வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொத்தியாபுலை கண்ணன்குடா பகுதியை சேர்ந்த ஒருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீது சுமத்தப்பட்டுள்ளன.