சிவநேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்ந்தும் விளக்கமறியலில்..

by Staff Writer 04-08-2026 | 6:59 PM

Colombo (News 1st) பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எதிர்வரும் 18ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நீதிவான் அண்ணாத்துரை தர்சினி முன்னிலையில் இன்று(04) நிகழ்நிலை ஊடாக அவர் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே  விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பான விபரங்களை கடந்த ஜூன் 15ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.

சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள 03 கொலை குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு இன்று இடம்பெற்றது.

இதனிடையே வெலிசரை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான சிவநேசதுரை சந்திரகாந்தனை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, சந்தேகநபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்ந்தும் வெலிசரை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் தொடர்பான அறிக்கை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதற்கமைய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் சிறைச்சாலை வசதிகளையும் கருத்திற்கொண்டே சிவநேசதுரை சந்திரகாந்தன் வெலிசரை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சந்தேகநபர், பயங்கரவாத தடை சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளதால் தற்போதுள்ள பயங்கரவாத தடை சட்டத்தின் படி தீவிர விசாரணையினூடாக சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் அனுமதி பெற்று அடுத்த வழக்கு திகதியில் முன்னேற்ற அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிப்பதாக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிவநேசதுரை சந்திரகாந்தனின் தாயார் 75 வயதானவர் என்பதுடன், நோய்வாய்ப்பட்டுள்ளதால் அவருடன் தொலைபேசியில் உரையாடுவதற்கான அனுமதியை பெற்றுத்தருமாறு சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றில் கோரிக்கை முன்வைத்தார்.

சந்தேகநபருக்கு வெளியில் இருந்து வழங்கப்படும் உணவுப்பொதி கடற்படை மற்றும் இராணுவத்தினரால் கடுமையாக பரிசோதிக்கப்பட்டு வழங்கப்படுவதால், அந்த உணவை உட்கொள்ள முடியாத நிலைமை ஏற்படுவதாகவும் சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார்.

இந்நிலையில், சிறைச்சாலை நடைமுறைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்துமாறு வெலிசரை கடற்படை முகாம் அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டார்.