17 வருடங்களின் பின்னர் கிடைத்த பிணை

17 வருடங்களின் பின்னர் பிணை - ஏனைய வழக்குகளால் தொடர்ந்தும் விளக்கமறியலில்

by Staff Writer 31-07-2026 | 3:24 PM

Colombo News1st 

17 வருடங்கள் கழித்து பிணை கிடைத்தும் ஏனைய வழக்குகளின் விசாரணைகள் தொடர்வதன் காரணமாக தொடர்ந்தும் விளக்கமறியலில் இருக்க வேண்டிய நிலை 2 அரசியல் கைதிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் அவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 2 சந்தேகநபர்களுக்கு 17 வருடங்களின் பின்னர் அந்த வழக்கில் நேற்றுமுன்தினம்(30) பிணை கிடைத்தது.

2 இலட்சம் ரூபா பிணையுடன் 50 இலட்சம் ரூபா பெறுமதியான 4 சரீரப்பிணைகளில் சந்தேநபர்கள் பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று(30) அனுமதி அளித்தது.

சண்முகலிங்கம் சூரியகுமார் மற்றும் தம்பையா பிரகாஷ் ஆகிய முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இருவருக்கே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த 2 சந்தேகநபர்களுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள ஏனைய வழக்குகள் காரணமாக தொடர்ந்தும் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிணை நிபந்தனைகளுக்கு மேலதிகமாக மாதந்தோறும் வாரத்தின் 2ஆவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமை காலையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் என்பதுடன் சந்தேகநபர்களின் கடவுச்சீட்டுகளை நீதிமன்ற பொறுப்பில் கையளிக்குமாறும் உத்தரவிடப்பட்டது.

சந்தேகநபர்கள் நகர்த்தல் பத்திரமொன்றின் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் பிணை கோரிக்கை முன்வைத்ததுடன் குறித்த இருவரும் 17 வருடங்களாக விளக்கமறியலில் இருப்பதை கவனத்திற்கொண்டு அவர்களுக்கு பிணை வழங்க தீர்மானிக்கப்பட்டது.

2006 ஏப்ரல் 25 ஆம் திகதி கொழும்பு இராணுவ தலைமையக வாயிலை அண்மித்து 'துர்கா' எனும் எல்.ரி.ரி.ஈ தற்கொலைதாரி நடத்திய தற்கொலை குண்டுதாக்குதலில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பலத்த காயமடைந்ததுடன் அவரது பாதுகாப்புக்காக இருந்த இராணுவ வீரர் ஒருவரும் 3 கோப்ரல்கள் உட்பட பாதுகாப்பு பிரிவு உறுப்பினர்களும் மேலும் சிலரும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக  சட்டமாஅதிபரினால் பிரதிவாதிகளுக்கு எதிராக 230 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளனது.

இந்த வழக்கிற்கு மேலதிகமாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2008 ஆம் ஆண்டில் விவசாய அமைச்சராக இருந்த போது அவரை பொரலஸ்கமுவையில் வைத்து கொலை செய்ய முயன்றதாகவும் 2008 ஏப்ரல் 6 ஆம் திகதி வெலிவேரியவில் வைத்து கொல்லப்பட்ட அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே மீதான தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு உதவியதாகவும் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.