சட்டத்தரணிகள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கு எதிராக சட்டத்தரணிகள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

by Staff Writer 29-07-2026 | 6:03 PM

Colombo (News 1st)  உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்கும் அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது.

நீதியமைச்சருடனான சந்திப்பிற்கு முன்னர் கொழும்பில் உள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்க மண்டபத்தில் சட்டத்தரணிகள் சங்க தலைவர் ரஜீவ் அமரசூரியவின் தலைமையில் நடைபெற்ற விசேட பொது கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள சங்கத்தின் உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டதுடன், மேலும் சிலர் இணையவழியில் கலந்துகொள்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த பொது கூட்டத்தில் 7 அம்ச கோரிக்கைகள் அடங்கிய தீர்மானத்தை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் முன்வைத்தார்.

உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்கும் அரசியலமைப்பு திருத்தத்தை நிராகரித்தல்,

அர்த்தமுள்ள உரையாடல் மற்றும் பரந்த மதிப்பீடு இன்றி அத்தகைய முன்மொழிவை முன்னெடுத்துச் செல்லாதிருத்தல்,

தற்போது வெற்றிடமாகவுள்ள நீதித்துறை பணியிடங்களை உடனடியாக நிரப்புதல், வழக்கு தாமதங்களைக் குறைத்தல்,

நிறுவன திறனை உயர்த்தல்,

நீதித்துறை நிர்வாகத்தை நவீனமயமாக்கல் மற்றும் நீதியை அணுகும் வாய்ப்பை மேம்படுத்துதல்,

நீதித்துறை ஓய்வுபெறும் வயதெல்லை தொடர்பான எதிர்கால மீளாய்வுகள், பரந்த பொதுமக்கள் கலந்துரையாடல்கள், சுயாதீன நிபுணர் மதிப்பீடுகளுக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் பரந்த நீதித்துறை கொள்கை மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த செயற்பாட்டின் ஒரு பகுதியாக அமைதல்,

நீதித்துறையின் சுயாதீனம், அதிகாரப் பகிர்வு, சட்டவாட்சி, அரசியலமைப்பை அடிப்படையாக கொண்ட ஆட்சி மற்றும் நீதி கட்டமைப்பின் நம்பகத்தன்மை ஆகியவற்றை பாதுகாப்பதில் சட்டத்தரணிகள் சங்கத்திற்கு காணப்படும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துதல் என்பன அந்த தீர்மானங்களாகும்.

மேலும், நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்கும் அதன் கோட்பாடுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு அரசியலமைப்பு நடவடிக்கைக்கும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் அதிகாரத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், செயற்குழு மற்றும் அதிகாரிகளுக்கு வழங்குவதற்கும் இன்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.