11 கோடி கொக்கெய்னுடன் ஸ்பெயின் நாட்டவர் கைது

11 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்னுடன் ஸ்பெயின் நாட்டவர் கைது

by Staff Writer 25-07-2026 | 10:41 AM

Colombo (News 1st) 11 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன்  ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 79 வயதுடைய ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கடந்த 22ஆம் திகதி சியரா லியோனில் இருந்து தோஹா ஊடாக நாட்டை வந்தடைந்தார்.

அவரது கைப்பை சுங்க அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்ட போதிலும், சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் காணப்படாததால் அவர் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தாமதமாக வந்த அவரது மற்றுமொரு பையை சோதனையிட்டபோது, மிகவும் நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 04 கொக்கெய்ன் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், குறித்த பையை எடுத்துச்செல்ல சந்தேகநபர் விமான நிலையத்திற்கு வந்திருந்த போதே கைது செய்யப்பட்டதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்தனர்.

இதன்போது 2 கிலோ 198 கிராம் நிறையுடைய கொக்கெய்ன் சந்தேகநபரின் பையில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்தனர்.