பசிலுக்கு மீண்டும் பிடியாணை

பசில் ராஜபக்ஸவிற்கு மீண்டும் பிடியாணை

by Staff Writer 21-07-2026 | 7:45 PM

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு மாத்தறை பிரதம நீதவான் சதுரங்க எரங்க திசாநாயக்க இன்று(21) மீண்டும் பிடியாணை பிறப்பித்துள்ளார்.

மாத்தறை, எலியகந்த வீதி, பிரவுன்ஸ் ஹில் என்ற முகவரியிலுள்ள ஒன்றரை ஏக்கர் காணியை கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கில் பசில் ராஜபக்ஸ ஆஜராகத் தவறியமையே இதற்கு காரணமாகும்.

பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபரான பசில் ராஜபக்ஸ கடந்த மே 22ஆம் திகதியும் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

பசில் ராஜபக்ஸ தொடர்ச்சியாக நீதிமன்றத்தைப் புறக்கணித்து வருவதால், முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற்கொண்ட மாத்தறை பிரதம நீதவான் சதுரங்க எரங்க திசாநாயக்க, அவருக்கு எதிராக மீண்டும் பிடியாணை பிறப்பிக்குமாறு உத்தரவிட்டார். 

முறைகேடாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி மாத்தறை, பிரவுன்ஸ் ஹில் பிரதேசத்தில் காணியொன்றைக் கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ, அவரது மனைவியின் சகோதரியான அயோமா கலப்பத்தி, அவரது கணவர் திஸ்ஸ கலப்பத்தி மற்றும் முதித ஜயகொடி ஆகியோருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கின் மூன்றாவது பிரதிவாதியான பசில் ராஜபக்ஸ மற்றும் நான்காவது பிரதிவாதியான அவரது மனைவியின் சகோதரி அயோமா கலப்பத்தி ஆகியோர் திறந்த நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை என்பதுடன், அவர்களது பிணையாளர்கள் திறந்த நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர். 

சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பிணையாளர்கள் தவறியதால் பிணை பணத்தை அரசுடைமையாக்குவது தொடர்பில் நீதிமன்றத்தில் விளக்கமளிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதன்போது பிணையாளர்கள் அது தொடர்பான எழுத்துமூல சமர்ப்பணங்களை முன்வைப்பதற்கு திகதியொன்றை கோரினர்.

அதற்கமைய, குறித்த எழுத்துமூல சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக எதிர்வரும் ஆகஸ்ட் 18ஆம் திகதி வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதவான் உத்தரவிட்டார்.

மேலும் சந்தேகநபரான பசில் ராஜபக்ஸவிற்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.