பொது சுகாதார பரிசோதகர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரம்

நுளம்பு பெருகும் இடங்களை பரிசோதனைக்குட்படுத்த பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அதிகாரம் - சுகாதார அமைச்சு

by Chandrasekaram Chandravadani 25-06-2026 | 8:45 AM

Colombo (News 1st) நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை பரிசோதனைக்குட்படுத்தும் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள பொது சுகாதாரப் பரிசோதகர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அனைத்து பொது சுகாதாரப் பரிசோதகர்களும் தொழில்நுட்ப மட்டத்தில் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகளுக்கான பங்களிப்பு வழங்கவுள்ளனர்.

நாட்டில் முதன்முறையாக கிராமிய மட்டத்தில் டெங்கு ஒழிப்பு திட்டமும் அது குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டமும் இதன்போது நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இதற்காக கிராம உத்தியோகத்தர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள் மற்றும் 'சமூக சக்தி' குழுக்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெங்கு பரவல் ஏற்பட்டுள்ள பிரதேசங்கள் மற்றும் டெங்கு நோயாளர்கள் தொடர்பான அனைத்து தரவுகளும் இதனூடாக கிராமிய மட்டத்தில் சேகரிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் கூறினார்.

இதனிடையே, டெங்கு அவதானம் அதிகமாகக் காணப்படும் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இரண்டாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.

அனைத்து கிராம மட்டங்களிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.