தெல்தெனியவில் மீட்கப்பட்ட சடலம் : சந்தேகநபர் கைது

தெல்தெனியவில் காரில் மீட்கப்பட்ட சடலம் : சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது

by Staff Writer 24-06-2026 | 3:36 PM

Colombo (News 1st) தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரிலிருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபரும் அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸில் வைத்தே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா பொலிஸார், வலான ஊழல் ஒழிப்புப்பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆகியன இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் இதற்கு முன்னர் தங்கியிருந்த இடத்தை சோதனையிடுவதற்காக இன்று அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

43 வயதான சந்தேகநபரும் 35 வயதான பெண்ணும் பல்லேகல பகுதியை சேர்ந்தவர்களாவர்.

பொலிஸ் மாஅதிபரின் அறிவுறுத்தலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

கடந்த 17ஆம் திகதி மாலை தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரிலிருந்து ​பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.

அம்பாறை வைத்தியசாலையில் இயன்முறை வைத்தியராக கடமையாற்றிய 33 வயதான வெலிகம பிரதேசத்தை சேர்ந்த பெண் என விசாரணைகளில் தெரியவந்தது.

அவரது மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் பகிரங்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக கம்பஹா, புதுக்கடை, திஸ்ஸமகராம, கடுவெல, ஹொரணை நீதிமன்றங்களில் ஊழல் மோசடி தொடர்பிலான விசாரரணகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து, ஒரு கோடியே 18 இலட்சத்து 73 ஆயிரம் ரூபா மோசடி செய்தமை மற்றும் காரை சட்டவிரோதமாக பயன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபருக்கு எதிராக வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றது.

மற்றுமொரு பெண்ணிடமும் திருமணம் செய்வதாக உறுதியளித்து 17 இலட்சத்து 21 ஆயிரம் ரூபா மோசடி செய்தமை தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராக புதுக்கடை இலக்கம் 05 நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறுகின்றது.

அத்துடன் மற்றொரு பெண்ணிடமும் தாம் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து, 13 இலட்சத்து 76 ஆயிரம் ரூபா மோசடி செய்துள்ளமை தொடர்பிலும் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வௌிநாடுகளில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதாக கூறி, 22 இலட்சம் ரூபா மோசடி செய்தமை தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராக திஸ்ஸமகராம நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றது.

நபர்களை வௌிநாடுகளுக்கு அனுப்புவதாக தெரிவித்து 42 இலட்சத்திற்கும் மேற்பட்ட பணத்தை மோசடி செய்துள்ளமை தொடர்பில் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக்கு விசாரணை நடைபெறுகின்றது.

இவற்றை தவிர சந்தேகநபருக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களம், புதுக்கடை, கடுவெல மற்றும் ஹொரணை நீதிமன்றங்களிலும் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.