24 மணித்தியாலங்களில் 681 டெங்கு நோயாளர்கள்

24 மணித்தியாலங்களில் 681 டெங்கு நோயாளர்கள்

by Staff Writer 21-06-2026 | 8:48 PM

Colombo (News 1st) 24 மணித்தியாலங்களில்புதிதாக  681 டெங்கு நோயாளர்கள்  அடையாளம் காணப்பட்டதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

பெருமளவான டெங்கு நோயாளர்கள் மஹரகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர், டொக்டர் கபில கன்னங்கர தெரிவித்தார்.

மாத்தறை, காலி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை, கம்பஹா மாவட்டத்தின் பியகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் டெங்கு நோய் வேகமாக பரவி வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தற்போது வரை 112 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் பதிவாகியுள்ளன.

இதனிடையே, மாத்தறை மாவட்டம் உள்ளிட்ட  கொழும்பு மற்றும் கம்பஹா வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கான கட்டில் வசதி மற்றும் இடவசதி பற்றாக்குறையாகியுள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 46,037 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

2024 மற்றும் 2025 ஆகிய வருடங்களுடன் ஒப்பிடும் போது நோயாளர்களின் எண்ணிக்கையில்  அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நுளம்புகள் பெருகக்கூடிய  பாடசாலைகள், அரச நிறுவனங்கள் மற்றும்  சமயஸ்தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களுக்குள் டெங்கு நுளம்பு குடம்பிகளுடன் கூடிய 263 பாடசாலைகள்  அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், வருடத்தின்  இதுவரையான காலப்பகுதியில் 633 பாடசாலைகள் சோதனையிடப்பட்டுள்ளன.

டெங்கு ஒழிப்பு வாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அடுத்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை நடைபெறவுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்  குமாநாயக்க தலைமையில் இந்த கலந்துரையாடல்  நடைபெறவுள்ளது.

சுகாதாரத் துறையின் அனைத்துத் தரப்பினருக்கும் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.