ஷசீந்திர ராஜபக்ஸவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை

ஷசீந்திர ராஜபக்ஸ உள்ளிட்ட மூவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

by Staff Writer 21-06-2026 | 8:41 PM

Colombo (News 1st) முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஸ உள்ளிட்ட மூவருக்கு எதிராக இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மகாவெலி அதிகாரசபைக்கு சொந்தமான செவனகல பகுதியில் அமைந்துள்ள காணியொன்றில் அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டிருந்த கட்டிடமொன்று உள்ளிட்ட சொத்துக்கள், கடந்த அரகல போராட்டக் காலப்பகுதியில் அழிவடைந்த பின்னர் இழப்பீட்டு அலுவலகத்தின் அதிகாரிகளுக்கு அழுத்தம் விடுத்து குறித்த சொத்துக்களுக்காக 88 இலட்சத்து 50,000 ரூபா இழப்பீடு பெற்றுக் கொண்டமையின் ஊடாக, ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் குறிப்பிடப்படும் குற்றத்தை இழைத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி முதல் 2024ஆம் ஆண்டு மே 29 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் குறித்த குற்றம் இழைக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச விசாரணை ஆணைக்குழு குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஸவுக்கு மேலதிகமாக, கொழும்பு இழப்பீட்டு அலுவலகத்தின் பதில் பணிப்பாளராகக் கடமையாற்றிய சேபாலிகா சமன் குமாரி, கீர்த்தி கொடகம ஆகியோர் தொடர்பிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக 10 குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வழக்கு விசாரணைகளின் போது 30 சாட்சியாளர்கள் மற்றும் 38 வழக்குப் பொருட்கள் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.