முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் மனு மீதான பரிசீலனை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் மனு மீதான பரிசீலனை

by Staff Writer 19-06-2026 | 7:37 PM

Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் தாம்  கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி ரொஹான்த அபேசூரிய மற்றும் சரத் திஸாநாயக்க ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையிலேயே குறித்த மனு பரிசீலிக்கப்பட்டது.

மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மனுதாரரான கோட்டாபய ராஜபக்ஸ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நீதிமன்றத்தில் முன்னிலையானா். 

அரசியலமைப்பில் நீதித்துறையின் சுதந்திரம் மட்டுமன்றி தனிமனித சுதந்திரமும்  உரிமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த சுதந்திரத்தை மிகக் குறைந்த சந்தர்ப்பங்களிலேயே மட்டுப்படுத்த முடியும் எனவும் உயிரித்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவது என்பது எந்தவொரு நியாயமான அடிப்படையும் இன்றி நபர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பது அல்ல என ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பாக தனது சேவைபெறுநர் எந்தவொரு விசாரணைக்கும் அழைக்கப்படவில்லை என குறிப்பிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறித்த விசாரணையின் எந்தவொரு சாட்சியாளருக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் கூறினார். 

இவ்வாறான பின்புலத்தில் எந்தவொரு நியாயமான அடிப்படையுமின்றி வாதிகள் தனது கட்சிக்காரருக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் வெளிநாட்டு பயணத்தடையை பெற்றுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி எவ்வித சாட்சியங்களுமின்றி விசாரணையொன்றின் மூலம் அவரது சுதந்திரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தினார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தனது சேவைபெறுநர் கைது செய்யப்பட்டால் அவருக்கு பிணை பெறுவதற்கான சுதந்திரம் பறிபோகும் என ஜனாதிபதி சட்டத்தரணி வலியுறுத்தினார்.

மனுதாரர் இந்த நீதிமன்றத்தை நாடியதற்குக் காரணம் அதுவே என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார்.

இதன்போது கேள்வி எழுப்பிய நீதிபதி சரத் திஸாநாயக்க, ஏதேனும் ஒரு விசாரணையை 24 மணித்தியாலங்களுக்குள் நிறைவு செய்ய முடியாத சந்தர்ப்பங்களில் இவ்வாறான சட்ட விதிகளின் பயன்பாடு இடம்பெறுவதாகக் குறிப்பிட்டார்.

அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி சட்டத்தரணி, தனிமனித சுதந்திரத்தைப் பறிப்பதற்கு இவ்வாறான சட்டங்களைப் பயன்படுத்த முடியாது எனக் கூறினார்.

தற்போதைய உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையிலான, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்த விசாரணை ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையின் எந்தவொரு இடத்திலும் மனுதாரர் பற்றி குறிப்பிடப்படவில்லை என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் பல்வேறு நபர்களைக் கைது செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கோரிக்கை விடுப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி, இதன் காரணமாக சட்டமாஅதிபர் திணைக்களமும் தற்போது நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தை ஒரு பொம்மை போன்று சித்தரிக்க ஜனாதிபதி சட்டத்தரணி முயற்சிப்பதாகவும் இது முற்றிலும் ஊடகங்களை இலக்கு வைத்துச் செய்யப்படும் ஒரு கூற்று என்றும் இதன்போது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் குற்றம் சுமத்தினார்.

எனினும், அந்தக் குற்றச்சாட்டை நிராகரித்த ஜனாதிபதி சட்டத்தரணி, தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சட்டமா அதிபரைக் குற்றம் சுமத்தவில்லை எனக் கூறினார்.

இதனையடுத்து, மனு மீதான பரிசீலனையை ஜூன் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதேவேளை, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்.

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேயிடம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் ஏதேனும் சிக்கல்கள் காணப்படின் அது குறித்து நீதிமன்றில் முறையிடுமாறு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.