.webp)

Colombo (News 1st) இறக்குமதி கொடுப்பனவுகள் தொடர்பில் இன்று(19) முதல் அமுலாகும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகளின் கீழ் இறக்குமதி கொடுக்கல் - வாங்கல்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளுக்கும் வங்கி ஊடாக விசேட கொடுக்கல் - வாங்கல் இலக்கம் ஒன்று வழங்கப்பட வேண்டும்.
குறித்த கொடுக்கல் - வாங்கல் தொடர்பான அனைத்து தகவல்களையும் இலங்கை சுங்கத்திடம் அறிவிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறக்குமதியாளர்களின் TIN இலக்கம், முகவரி, பயனாளிகளின் தகவல்கள், வங்கி மற்றும் வங்கிக்கிளை குறியீடு, செலுத்தப்படும் தொகை, நாணய அலகு, கொடுப்பனவு மற்றும் கையளிக்கும் நிபந்தனை, கொடுப்பனவு திகதி, Proforma Invoice மற்றும் இறக்குமதி செய்யும் பொருளின் விபரம் உள்ளிட்ட தகவல்கள் வங்கி ஊடாக சுங்கத்திற்கு வழங்கப்பட வேண்டும்.
பொருட்களை இறக்குமதி செய்வதற்காக முற்பணம் செலுத்த முன்னர் இறக்குமதியாளர்கள் இலங்கை சுங்கத்தில் பதிவு செய்ய வேண்டியது இந்த அதிவிசேட வர்த்தமானி ஊடாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் கீழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை சுங்கத்தில் பதிவு செய்யப்படாத இறக்குமதியாளர்கள், வணிக வங்கிகளுக்கு முற்பணம் கொடுக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகளுக்கான அந்நிய செலாவணிக் கொடுப்பனவுகளை மேலும் வினைத்திறனாக முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் இந்தப் புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
