.webp)

Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் குறித்து சில நபர்கள் ஊடகங்களில் வெளியிட்ட கருத்துகளினூடாக நீதிமன்ற அவமதிப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு அறிக்கையிட்டது.
திலித் ஜயவீர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சுகீஸ்வர பண்டார, மஹிந்த பத்திரன மற்றும் அசங்க நவரத்ன ஆகியோர் வெளியிட்ட கருத்துகளினூடாக நீதிமன்ற அவமதிப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களம் நகர்த்தல் பத்திரத்தை தாக்கல் செய்து கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இது தொடர்பில் அறிவித்தது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் 2024ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க நீதிமன்றம், நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டத்தின் கீழ் குறித்த நபர்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
