.webp)

Colombo (News 1st) தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்ட போது சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டாரா என்பதை பரிசோதிப்பதற்காக, விசேட சட்ட வைத்திய அதிகாரிகள் மற்றும் 05 விசேட மனநல வைத்தியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவை கோட்டை நீதவான் நீதிமன்றம் பெயரிட்டுள்ளது.
அடுத்த வழக்கு விசாரணைக்கு முன்னர், சந்தேநபரான சுரேஷ் சலே சோதனைக்குட்படுத்தப்பட வேண்டும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த மருத்துவ பரிசோதனை கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சந்தேகநபர் தொடர்பில் இதற்கு முன்னர் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மருத்துவ அறிக்கை, முழுமையான அறிக்கை இல்லை எனவும் அந்த அறிக்கைக்கமைய சந்தேகநபர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட போது சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதாக தீர்மானிக்க முடியாதெனவும் நீதவான் சுட்டிக்காட்டினார்.
சுரேஷ் சலே தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதனிடையே, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படுவதாகத் தெரிவித்து, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, டிரான் அலஸ், சரத் வீரசேகர, அனுராதா யஹம்பத், ஜயந்த சமரவீர, சஞ்சீவ எதிரிமான்ன, மதுபாஷன பிரபாத், ச்சானக பண்டார, பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர், பெங்கமுவே நாலக தேரர் உள்ளிட்ட தரப்பினர் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு நேற்று(09) விடயங்களை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
