.webp)

Colombo (News 1st) தமிழ் திரையுலகில் 'இயக்குநர் இமயம்' என கொண்டாடப்பட்ட பாரதிராஜா, உடல்நலக் குறைவினால் இன்று(10) காலை தனது 84ஆவது வயதில் காலமானார்.
அரங்கிற்குள் முடங்கிக் கிடந்த தமிழ் சினிமாவை வெளி உலகத்திற்கு கொண்டு வந்து மக்களை சினிமாவோடு ஒன்றிப்போக வைத்தவர் பாரதிராஜா..
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
திரைத்துறையில் பாரதிராஜாவின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரச மரியாதை வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கிராமத்திற்கு சினிமா என்பது கனவாக இருந்த காலத்தில் அதனை நனவாக்கியவராக பாரதிராஜா வரலாற்றில் இடம்பிடித்தார்.
1941 ஜூலை 17ஆம் திகதி, தேனி மாவட்டம் அல்லி நகரத்தில் பெரியமாயத்தேவர், கருத்தம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.
நடிகராகும் ஆசையில் சினிமாவிற்குள் நுழைந்தாலும், சினிமா தந்த அனுபவம் அவரை இயக்குநராக மாற்றியது.
'16 வயதினிலே' திரைப்படம், தமிழ் சினிமாவின் ஒரு மைல்கல்.
பாரதிராஜாவின் முதல் திரைப்படம், அவரை உச்சத்திற்கு கொண்டுசென்று, தமிழக அரசின் விருதை பெற்று வரலாற்று சாதனை படைத்தது.
தமிழ் சினிமாவிற்கு ரேவதி, ராதா, ராதிகா, ரேகா உள்ளிட்ட பல நடிகைகளை அறிமுகம் செய்த பெருமையும் அவரையே சாரும்.
இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பாரதிராஜா பல படங்களில் முத்திரை பதித்துள்ளார்.
தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த கே.பாக்யராஜை நடிகராக அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா.
பாரதிராஜா தன் அம்மாவின் பெயரில் எடுத்த 'கருத்தம்மா' படத்திற்கு தேசிய விருது கிடைத்த போது, தன் தாயாரையே விருது பெறச்செய்தவர்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா 44 திரைப்படங்களை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இயக்கியுள்ளார்.
1977ஆம் ஆண்டில் '16 வயதினிலே' படத்தின் மூலம் அறிமுகமான இவர், கிராமத்து வாழ்க்கையை தனது படங்களில் மிகவும் உண்மையாகவும் உணர்வுபூர்வமாகவும் காட்டி புகழ்பெற்றவர்.
இவர் இயக்கிய 'கிழக்கே போகும் ரயில்' பெரும் வெற்றியை தந்தது.
முதல் மரியாதை, சிவப்பு ரோஜாக்கள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, மண் வாசனை, கிழக்குச் சீமையிலே ஆகிய திரைப்படங்கள் கே.பாரதிராஜாவின் இயக்கத்தில் உருவான காலத்தால் அழியாத படைப்புகளாகும்.
அந்திமந்தாரை, கடல் பூக்கள் உள்ளிட்ட படங்களுக்காக 06 தேசிய திரைப்பட விருதுகளை பெற்றவர்.
04 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், 06 தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் மற்றும் நந்தி விருதை வென்றுள்ளார்.
திரைப்படத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2004ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு இந்தியாவின் நான்காவது உயரிய விருதான 'பத்மஸ்ரீ' விருதை வழங்கி கௌரவித்தது.
2005ஆம் ஆண்டில் சத்யபாமா பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டொக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.
பல வரலாற்று சாதனைகளுக்கு சொந்தமான பாரதிராஜா கடந்த ஆண்டு தனது மகன் மனோஜ் உயிரிழந்ததை தொடர்ந்து மனரீதியாக பாதிக்கப்பட்டதுடன் உடல்நலம் குன்றிய நிலையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா..
முதல் மரியாதைக்கு, எமது இறுதி மரியாதை..
