உலகின் கவனத்தை ஈர்த்த இலங்கையின் ருமேஷ் தரங்க

ஈட்டி எறிதலில் போட்டி, இலங்கை சாதனையுடன் வெற்றியீட்டிய ருமேஷ் தரங்க

by Staff Writer 05-06-2026 | 7:04 PM

Colombo (News 1st) இத்தாலியின் ரோமில் நடைபெற்ற டயமன்ட் லீக் மெய்வல்லுநர் போட்டிகளிலேயே ருமேஷ் தரங்க இந்த திறமையை வௌிப்படுத்தினார். சர்வதேச தரப்படுத்தலில் இரண்டாமிடத்தில் நீடிக்கும் கிரெனேடாவின் எண்டர்சன் பீட்டர்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர வீரர்கள் இந்தப்போட்டியில் ருமேஷ் தரங்கவுக்கு சவால் விடுத்தனர். தனது இரண்டாவது சந்தர்ப்பத்திலேயே 92 தசம் 62 மீட்டர் தூரத்துக்கு திறமையை வெளிப்படுத்திய ருமேஷ் தரங்க தொடருக்கான சாதனையையும் இலங்கை சாதனையையும் நிலைநாட்டினார். இதன்மூலம் உலகின் மிகச்சிறந்த ஈட்டி எறிதல் வீரர்களின் பட்டியலில் எட்டாமிடத்துக்கு ருமேஷ் தரங்க முன்னேறினார். ஆசியாவின் இரண்டாவது மிகச்சிறந்த ஈட்டி எறிதல் வீரராகவும் அவர் பதிவானார். 20 வருடங்களுக்கு முன்னர் ரோமில் நடைபெற்ற டயமன்ட் லீக் தொடரில் நோர்வேயின் என்ரியாஸ் தோகில்ட்சன் 90 தசம் 34 மீற்றர் தூரத்துக்கு திறமையை ருமேஷ் தரங்க நேற்று(04) முறியடித்திருந்தார். கடந்த 4 வருட காலப்பகுதியில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் வீரர் ஒருவர் வெளிப்படுத்திய அதிகபட்ச திறமையாகவும் இந்த வருடத்துக்கான போட்டித் தொடரில் பதிவான அதிகூடிய தூரத்துக்கான திறமையாகவும் இது பதிவானது. 2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கி விழாவில் தங்கப்பதக்கம் வென்ற பாகிஸ்தானின் அர்ஷத் நதீமின் பின்னர் ஆசிய வீரர் ஒருவர் ஈட்டி எறிதல் போட்டியில் வெளிப்படுத்திய மிகச்சிறந்த திறமை இதுவாகும். ருமேஷ் தரங்க தற்போது ஆடவர் ஈட்டி எறிதலுக்கான உலகத் தரவரிசையில் ஐந்தாமிடத்தில் நீடிக்கிறார். அவர் எதிர்வரும் 16 ஆம் திகதி செக் குடியரசில் நடைபெறவுள்ள பகிரங்க மெய்வல்லுநர் தொடரில் பங்கேற்கவுள்ளமை சிறப்பம்சமாகும்.