ஒரு கோடி ரூபா கொள்ளை : 02 சந்தேகநபர்கள் கைது

யாழில் ஒரு கோடி ரூபா கொள்ளை : 02 சந்தேகநபர்கள் கைது

by Staff Writer 02-06-2026 | 3:14 PM

Colombo (News 1st) யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை, கொம்மாந்துறை பகுதியிலுள்ள வீடொன்றில் அண்மையில் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 15 வயதுடைய சிறுவன் மற்றும் 19 வயதுடைய இளைஞர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது, சிறுவனை சிறுவர் நன்னடத்தை நிலையத்திற்கு அனுப்புமாறு உத்தரவிடப்பட்டதுடன் இளைஞனை 03 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்த அனுமதி வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வல்வெட்டித்துறை கொம்மாந்துறை பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த 27ஆம் திகதி சந்தேகநபர்கள் இருவரும் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

சந்தேநபர்களிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளில் குறித்த இருவரும் வீட்டிலிருந்த பெருந்தொகை பணத்தை அவதானித்து, நெடுங்கேணியிலுள்ள வேறொரு நபருக்கு அறிவித்ததை தொடர்ந்து அவரின் வழிகாட்டுதலுக்கமைய இருவரும் பணத்தையும் கொள்ளையடித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கொள்ளையடித்த பணத்தை நெடுங்கேணியிலுள்ள பகுதியில் மறைத்து வைத்துவிட்டு திரும்பும் போதே இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் நெடுங்கேணியை சேர்ந்த மற்றைய சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து இதுவரை 74 இலட்சம் ரூபா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், தலைமறைவாகியுள்ள சந்தேகநபரை தேடி மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கூறினர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.