ஜனாதிபதியின் வெசாக் வாழ்த்துச் செய்தி

வெளி உலகில் அமைதியை ஏற்படுத்த முன் மனிதனின் மனதுக்குள் ஆன்மீக அமைதி உறுதிப்படுத்தப்பட வேண்டும் - ஜனாதிபதி

by Staff Writer 30-05-2026 | 8:10 PM

Colombo (News 1st) வெளி உலகில் அமைதியை ஏற்படுத்துவதற்கு முதலில் மனிதனின் மனதுக்குள் ஆன்மீக அமைதி உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை பௌத்த தர்மம் எடுத்தியம்புவதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறுகிறார்.

பொதுவான நல்ல நோக்கங்களுக்காக சமூகத்தை ஒன்றிணைக்க பௌத்த தர்மம் காட்டும் இந்த மன அமைதி வழியானது இன்றைய தினத்திற்கு மிகவும் பொருத்தமானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்துகிறார்.

நாட்டில் சமாதான பாதயாத்திரையை மேற்கொண்ட வியட்நாமின் பஞ்ஞாக்கர தேரரும் இலங்கைக்கு வழங்கிய செய்தி இதுவென தாம் நம்புவதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு ஜானாதிபதி வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அனைத்து இனங்களுக்கிடையிலும் பரஸ்பர புரிந்துணர்வு, ஒற்றுமை மற்றும் சகவாழ்வை மேம்படுத்தும் வெசாக் வைபவம் நல்லிணக்கத்தின் அடையாளமாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அகிம்சை, கருணை மற்றும் அனைத்து உயிரினங்கள் மீதான எல்லையற்ற அன்பு ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட சம்புத்த தர்மத்தின் விழுமியங்களை வாழ்க்கையில் இணைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.