பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

பொலிஸ் தலைமையகம் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

by Staff Writer 30-05-2026 | 8:29 PM

Colombo (News 1st) போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக அபராத தொகை செலுத்த வேண்டியிருப்பதாக பொலிஸாரால் அனுப்பப்பட்டுள்ளமையை போன்றதொரு தகவல் சமூக ஊடகங்கள் மூலமாகவும் தனிநபர்களுக்கும் கிடைத்துவருகின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இத்தகைய மோசடி செய்திகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய சைபர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகாமல் விழிப்புடன் செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தினால் வழிகாட்டல்கள் வௌியிடப்பட்டுள்ளன.

குறுஞ்செய்திகள், மின்னஞ்சல் அல்லது ஏனைய தகவல் தொடர்பு செயலிகள் மூலம் கிடைக்கும் சந்தேகத்திற்கிடமான லிங்குகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

ஏதேனும் ஒரு லிங்க்கை திறப்பதற்கு அல்லது அதற்கு பதிலளிப்பதற்கு முன்னர், அந்த இணையதளத்தின் நம்பகத்தன்மை மற்றும் அதனை அனுப்பிய தரப்பினரின் விபரங்களை நன்கு பரிசீலித்துப் பார்க்குமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அடையாளம் தெரியாத இணைப்புகள் அல்லது இணையதளங்கள் ஊடாக தனிப்பட்ட விபரங்கள், வங்கி கணக்கு விபரங்கள், OTP எனப்படும் ஒரு முறைக்கான கடவுச் சொல் அல்லது ஏனைய கடவுச்சொற்களைப் (Passwords) பகிர்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தகவல்களின் உண்மைத்தன்மையை, உத்தியோகபூர்வ பொலிஸ் ஊடக அறிக்கைகள் மற்றும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்கள் மூலமாக மாத்திரம் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான செய்திகள், இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறும்,

பாதுகாப்பு அபாயங்களைக் குறைப்பதற்காக கையடக்க தொலைபேசிகள் மற்றும் மென்பொருள் செயலிகளை தொடர்ச்சியாகப் புதுப்பிக்குமாறும்,

அவசரத் தேவை, அச்சுறுத்தல் அல்லது உடனடியாகப் பணம் செலுத்துமாறு கோரி வரும் தகவல்கள் தொடர்பில் அதீத கவனம் செலுத்துமாறும் பொலிஸாரினால் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டல்களை பின்பற்றுவதன் மூலம் பொதுமக்கள் மோசடிகளில் சிக்குவதை தவிர்க்க அல்லது குறைக்க முடியும் என்பதுடன், சைபர் குற்றங்களைக் குறைப்பதற்கான மிகப்பெரும் பக்கபலமாக இது அமையுமெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.