தங்கை உயிரிழந்த விவகாரத்தில் சகோதரன் கைது

தங்கை உயிரிழந்த விவகாரத்தில் சகோதரன் கைது - மட்டக்களப்பில் சம்பவம்

by Staff Writer 30-05-2026 | 8:37 PM

Colombo (News 1st) மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  5ஆம் குறிச்சி கிராமத்தில் சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது சகோதரர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

15 வயதுடைய சகோதரனே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 27 ஆம் திகதி 10 வயதுடைய சிறுமியொருவர் குளியலறையில் காணப்பட்ட நீர்த்தொட்டிக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலேயே சிறுமியின் சகோதரர் இன்று(30) காலை கைது செய்யப்பட்டதுடன் அவரிடம் வாக்குமுலம் பெறப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

டிக்டொக் பார்ப்பதற்காக தொலைபேசியை தருமாறு சகோதரனினால் தனது தங்கையிடம் கோரப்பட்டுள்ளது.

இதன்போது தொலைபேசியை வழங்க தங்கை மறுத்ததால் அவரை தாக்கியதாக குறித்த சகோதரன் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

தாக்குதலுக்கான சிறுமி கதிரையிலிருந்து கீழே வீழ்ந்து மயக்கமடைந்த நிலையில் அவரை குளியலறையில் நீர் நிரம்பிய தொட்டிக்குள் போட்டதாகவும் சகோதரனினால் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், சிறுமியின் சடலம் மீதான பிரேத பரிசோதனை நாளை நடைபெறவுள்ளதாகவும் கூறினர்.

சிறுமி கழுத்து நெரித்து கொல்லப்பட்ட பின்னர் நீர்த்தொட்டிக்குள் போடப்பட்டாரா அல்லது தாக்குதலில் ஏற்பட்ட மயக்கத்தினால் உயிரிழந்தாரா என்பது தொடர்பில் பிரேத பரிசோதனை அறிக்கையின் பின்னரே அறிந்துகொள்ள முடியுமெனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.