.webp)
-556505.jpg)
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே புலனாய்வு தகவல்கள் கிடைத்த போதிலும், அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை ஊடாக குற்றவியல் ரீதியாக கடமையைப் புறக்கணித்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை எதிர்வரும் ஜூன் 12ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(27) தீர்மானித்தது.
இந்த வழக்கு பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய, திலகரத்ன பண்டார ஆகிய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதிகளான ஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித் ஜயசுந்தர ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
விடயங்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம், சமர்ப்பிப்புகளை முன்வைப்பதற்காக எதிர்வரும் ஜூன் 12ஆம் திகதி வழக்கை மீண்டும் விசரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு தீர்மானித்தது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை ஊடாக குற்றவியல் ரீதியாக கடமையைப் புறக்கணித்தமை, குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் குற்றங்களை புரிந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட மாஅதிபரால் கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கை விசாரித்த அன்றைய கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், வழக்கின் முறைப்பாட்டாளர்களின் சாட்சியங்களை விசாரித்த பின்னர் பிரதிவாதிகளின் வாக்குமூலங்களை கோராமல் 2022 பெப்ரவரி 18ஆம் திகதி பிரதிவாதிகளை வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்தது.
மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதியரசர்கள் குழாத்தின் அந்த முடிவு சட்டத்திற்கு முரணானது எனவும் அதனை செல்லுபடியற்றதாக்குமாறும் கோரி சட்ட மாஅதிபரினால் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதற்கான உத்தரவை பிறப்பித்த உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், வழக்கு விசாரணையின் போது மேல் நீதிமன்றம் பிரதிவாதிகளின் வாக்குமூலங்களை கோரியிருக்க வேண்டும் எனவும் பிரதிவாதிகளின் வாக்குமூலங்களை கோராமல் அவர்களை விடுவிப்பது சட்டத்திற்கு முரணானது எனவும் தெரிவித்தது.
அதற்கமைய, குறித்த வழக்கின் மீள் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
