.webp)

Colombo (News 1st) மிகவும் குறுகிய காலப்பகுதியில் ஆசியாவின் வலுவான நாணய அலகாக இலங்கை ரூபா, திடீரென மாறியுள்ளதாக Bloomberg இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது.
இலங்கை ரூபா கடந்த 03 வருடங்களின் பின்னர் ஆசியாவில் வலுவான நாணய அலகாக பாரிய வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
09 நாட்களாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்த இலங்கை ரூபா, அமெரிக்க டொலருக்கு நிகராக குறிப்பிடத்தக்க அளவில் வலுவடைந்து ஆசியாவின் மிகச்சிறந்த செயற்றிறனைக் கொண்ட நாணயமாக மாறியுள்ளதாக Bloomberg செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ரூபாவின் மதிப்பு 2.7 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 மார்ச் மாதத்திற்கு பின்னர் இலங்கை ரூபா பதிவு செய்த அதிகளவான ஒருநாள் வளர்ச்சியாகும் என Bloomberg குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றிடமிருந்து எதிர்காலத்தில் அந்நியச் செலாவணி கிடைக்கப் பெறவுள்ளதாக சந்தை பங்குதாரர்கள் எதிர்பார்ப்பதனால், இதற்கு முன்னர் டொலர்களை கையிருப்பில் வைத்திருந்தவர்கள் தங்களிடமிருந்த டொலர்களை சந்தைக்குள் விடுவதற்கு தூண்டப்பட்டுள்ளனர்.
தனிப்பட்ட வாகன இறக்குமதியின் மீது மேலதிக வரிகளை விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமையும் ஒரு காரணமாகும்.
சந்தை ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி தலையிடும் என அறிவித்தமையும் ரூபா வலுவடைந்தமைக்கு காரணமாக அமைந்துள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்பட்ட யுத்த நிலைமையினால் உலக சந்தையில் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி காரணமாக ஆசிய பிராந்தியத்திலுள்ள நாடுகளின் நாணய அலகுகள் அழுத்தத்திற்கு உள்ளாயிருந்தன.
அண்மையில் இறக்குமதியாளர்கள் அதிகளவில் டொலர்களை கொள்வனவு செய்ததாலும், ஏற்றுமதியாளர்கள் தங்களிடமிருந்த அந்நியச் செலாவணியை ரூபாவாக மாற்றுவதில் ஏற்படுத்திய தாமதம் ரூபாவின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.
எனினும், இந்த புதிய போக்கின் ஊடாக இலங்கை ரூபாவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக Bloomberg சுட்டிக்காட்டியுள்ளது.
