இலங்கை சிறந்த தயார் நிலையில் உள்ளது - IMF

இலங்கை சிறந்த தயார் நிலையில் உள்ளது - IMF

by Staff Writer 23-05-2026 | 7:14 PM

Colombo (News 1st) உலகளாவிய ரீதியில் ஏற்படும் தாக்கங்களினால் பொருளாதாரத்திற்கு அழுத்தங்கள் ஏற்படக்கூடும் என்றபோதிலும் வலுவான கொள்கைகளைக் கொண்டுள்ளமையினால் இவ்வாறான சிக்கல்களை எதிர்கொள்வதற்கு இலங்கை தற்போது சிறந்த தயார் நிலையில் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரக் கொள்கைக் கட்டமைப்பு கடந்த காலத்தை விட மிகவும் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.  

பேரினப் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் கையிருப்புகளை அதிகரிப்பதற்கும் இலங்கை அரசாங்கம் அண்மையில் முன்னெடுத்த நடவடிக்கைகள், நாட்டு மக்கள், முதலீட்டாளர்கள், ஏனைய தரப்பினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்பாட்டுப் பிரதானி இவான் பபஜோர்ஜு (Evan Papageorgiou) தெரிவித்துள்ளார்.

இதுவரை முன்னெடுக்கப்பட்ட மறுசீரமைப்புகளைப் பாராட்டியுள்ள அவர் கொள்கைகளின் ஸ்திரத்தன்மையை பேணுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுவரை பெற்றுக்கொண்ட வெற்றிகளை தொடர்ந்தும் பேண வேண்டுமாயின் ஒரே கொள்கையில் நிலையாகப் பயணிப்பதும் மாறுபடும் நிலைமைகளுக்கு ஏற்ப பொருளாதாரத்தை இசைவாக்கமடைய இடமளிப்பதும் மிகவும் முக்கியமானது என இவான் பபஜோர்ஜு வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு செயன்முறை முன்னெடுக்கப்படும் போது நாட்டின் அதிகாரிகளுடன் தொடர்ந்தும் மிக நெருக்கமாகச் செயற்பட தாம் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை எதிர்வரும் 27 ஆம் திகதி கூடி இரண்டு மீளாய்வுகளுக்கும் அனுமதியளிக்கும் பட்சத்தில் 6ஆவது, 7ஆவது கடன் தவணைகளைப் பெற்றுக்கொள்வதற்கு இலங்கை தகுதிபெறும்.

அதன் பெறுமதி 700 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.