.webp)
Colombo (News 1st) 300 ஆண்டுகளாக நெதர்லாந்திலுள்ள பல்கலைக்கழகமொன்றில் வைக்கப்பட்டிருந்த சோழர் காலத்திற்குரிய செப்பேடுகள் மீண்டும் இந்தியாவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நெர்தலாந்து விஜயத்தின் போது அவை மீளவும் இந்தியாவிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹேக் நகரில் இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற நிகழ்ச்சியில் நரேந்திர மோடி கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது பிரசித்தி பெற்ற ஆனைமங்கலம் தாமிர தகடுகள் பிரதமர் மோடி முன்னிலையில் மீள ஒப்படைக்கப்பட்டன.
தென்னிந்திய அரசாட்சிகளில் ஒன்றான 11ஆம் நூற்றாண்டு சோழர் காலத்திலான இந்த கலைப் பொருட்கள் லெய்டன் பல்கலைக்கழகத்தில் கடந்த 300 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக 2023ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பின் தலையீட்டால் இந்த செப்பேடுகள் திருப்பி தரப்பட்டுள்ளன.
30 கிலோகிராம் எடை கொண்ட 21 செப்பேடுகள் ஒரு வெண்கல வளையம் கொண்டு பிணைக்கப்பட்டுள்ளன.
அதில் முதலாம் இராஜேந்திர சோழரின் முத்திரை உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த பதிவுகளுக்கமைய 985 முதல் 1014 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட முதலாம் இராஜராஜ சோழன் மற்றும் அவருடைய மகனான இராஜேந்திர சோழன் ஆகியோரின் காலத்தில் இவை உருவாக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
