.webp)

Colombo (News1st) இலங்கைக்கு வடகிழக்கே நிலைக்கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழந்து இந்தியா நோக்கிய திசையில் நகர்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் தாக்கத்தினால் நாட்டில் தொடர்ந்தும் கடும் காற்று மற்றும் மழை நீடிக்குமென எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டல படிப்படியாக நகரும் நிலையில், அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்பதுடன், மழையுடனான வானிலையும் அதிகரிக்கக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, முல்லைத்தீவிலிருந்து கங்கேசன்துறை, புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பிராந்தியங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பிராந்தியங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் இடைக்கிடையே மணிக்கு 50 முதல் 55 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் அறிவித்தல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு மீனவர்கள் மற்றும் கடற்சார் ஊழியர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டிற்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வட மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவிலான மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ள
களனி, கிங், நில்வலா, மாஓயா ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 20 நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போதிலும், வெள்ள அபாயம் இல்லை எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
13 மாவட்டங்களிலுள்ள பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
பதுளை, கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை, மொனராகலை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்ைகயே நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, குருநாகல், இரத்தினபுரி ஆகிய 06 மாவட்டங்களிலுள்ள 26 பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடிக்கப்பட்டிருந்த இரண்டாம் கட்ட மண்ண்சரிவு அபாய எச்சரிக்கைகள் நீடிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவிய மழையுடனான வானிலையால் 12 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்து 338 குடும்பங்களைச் சேர்ந்த நான்காயிரத்து 354 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
82 குடும்பங்களைச் சேர்ந்த 250 பேர் தற்காலி பாதுகாப்பு முகாம்களில் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
149 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், ஒரு வீடு முழுமையாகச் சேதமடைந்துள்ளது.
இந்த நிலையில். அனர்த்தங்களின் போது தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ள, 117 என்ற அவசர அழைப்பு இலக்கம் 24 மணித்தியாலங்களும் செயற்படுத்தப்படுவதாகவும், அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
பலத்த மழையினால் ஏற்பட்ட வௌ்ளத்தினால் புத்தளம் மாவட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் - முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
புபுதுகம கிராம சேவகர் பிரிவில் உள்ள ஸ்ரீமாவோபுரம் கிராமத்தில் 65 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
30 குடும்பங்கள், இடைத்தங்கல் முகாமிலும், சிலர் தங்களது உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
இதேவேளை, அதிக மழையுடனான வானிலையினால் மதுரங்குளி பகுதியிலுள்ள விகாரையின் மதில் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
மட்டக்களப்பு - மஞ்சந்தொடுவாய் பகுதியில் வீடொன்றின் மீது மின்னல் தாக்கியதில் வீட்டிலிருந்த மூவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஒருவர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
