.webp)
-616187-556208.jpg)
Colombo (News1st) கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கம்பஹா ஒஸ்மன் எனும் நபரை 90 நாட்களுக்கு தடுத்துவைத்து விசாரணைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மே 16 முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடைய கம்பஹா ஒஸ்மன் என அழைக்கப்படும் ஒஸ்மன் குணசேகர கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
இந்த கைது நடவடிக்கையின் பின்னர் அவரை 72 மணித்தியாலங்கள் தடுத்துவைத்து விசாரணைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் அதனை 90 நாட்கள் வரை நீடிப்பதற்கான உத்தரவு இன்று பெறப்பட்டுள்ளது.
கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி கொழும்பு புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்ற அறையில் சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் சஞ்ஜீவ குமார சமரரத்ன என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தக் குற்றத்தை, வௌிநாட்டில் தங்கியுள்ள திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுடன் இணைந்து திட்டமிட்டமை, சதித்திட்டம் தீட்டியமை, குற்றத்தை புரிவதற்கு தேவையான துப்பாக்கியை வழங்கி கொலைக்கு ஒத்தாசை வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் ஒஸ்மன் குணசேகர கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரிடமிருந்து அனுமதிப்பத்திரமற்ற வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிபீட்டர் ரக துப்பாக்கியும் 10 ரவைகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படும் சந்தேகநபர் வழங்கிய தகவலுக்கு அமைய கம்பஹா ஒஸ்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.
