நாட்டின் பல பகுதிகளில் 100mm கனமழை

நாட்டின் பல பகுதிகளில் 100mm கனமழை

by Staff Writer 14-05-2026 | 6:30 AM

Colombo (News 1st) நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பல பிரதான ஆறுகளின் நீர்மட்டம் வெள்ள அபாய மட்டத்தை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நில்வலா கங்கை பானதுகம பிரதேசத்திலும் அத்தனகலு ஓயா டுனாமலே பிரதேசத்திலும் வெள்ள அபாய மட்டத்தை எட்டியுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தெதுரு ஓயா, லுணுகம்வெஹெர, வெஹெரகல உள்ளிட்ட 16 பாரிய நீர்த்தேக்கங்களும் 18 நடுத்தர நீர்த்தேக்கங்களும் வான்பாய்வதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் குறைந்த காற்றழுத்தப் பகுதியானது நாட்டிலிருந்து விலகிச்சென்று படிப்படியாக வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, பதுளை, கண்டி, இரத்தினபுரி, நுவரெலியா, மாத்தளை, கேகாலை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

கடும் மழை காரணமாக வௌ்ளத்தில் மூழ்கியிருந்த தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொழும்பு நோக்கி பயணிக்கும் வெலிப்பென்ன இடமாறல் தற்போது மீள திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.