மழையுடனான வானிலை தொடரும் - வானிலை எதிர்வுகூறல்

மழையுடனான வானிலை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்

by Staff Writer 12-05-2026 | 3:22 PM

Colombo (News 1st) நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை நாளையும்(13) நாளை மறுதினமும்(14) தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு, வட மத்திய, வட மேல், மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென திணைக்களம் கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுமென்பதுடன் இடி, மின்னல் தாக்கங்களால் ஏற்படும் ஆபத்துகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. 

நிலவும் மழையுடனான வானிலையினால் 06 மாவட்டங்களின் 12 பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலக பிரிவிற்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையும் 
பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை பிரதேச செயலக பிரிவிற்கும் 
களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட பிரதேச செயலக பிரிவிற்கும்
குருநாகல் மாவட்டத்தின் ரிதிகம பிரதேச செயலக பிரிவிற்கும்
மாத்தளை மாவட்டத்தின் நாஉல, அம்பன்கங்க கோரளை, இரத்தோட்டை பிரதேச செயலக பிரிவுகளுக்கும்
மொனராகலை மாவட்டத்தின் படல்கும்புர, வெல்லவாய பிரதேச செயலக பிரிவுகளுக்கும்
இரத்திரனபுரி மாவட்டத்தின் கொடகவெல, இரத்தினபுரி, கலவானை பிரதேச செயலக பிரிவுகளுக்கும் முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழையுடனான வானிலையினால் 16 பிரதான நீர்த்தேக்கங்கள் வான்பாய்வதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, 42 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதி அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.