.webp)
-615842-556049.jpg)
Colombo (News 1st) சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அட்மஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெறும் அவரை புதுக்கடை இலக்கம் 2 நீதவான் நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரான தேரரை சிறைச்சாலை வைத்தியசாலை அல்லது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான உத்தரவை நீதவான் பிறப்பித்தார்.
அத்துடன், சந்தேகநபரை எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரம் பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று(08) விடயங்கள் முன்வைக்கப்பட்டதை அடுத்து சந்தேகநபரான தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில் சந்தேகநபரான தேரருக்கு வெளிநாட்டு பயணத்தடையை விதித்து அனுராதபுரம் பிரதம நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன உத்தரவிட்டார்.
இதேவேளை, சம்பவத்திற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட சிறுமியின் தாயை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
