.webp)

Colombo (News 1st) ஆட்சியமைப்பதற்கான அழைப்பை விடுக்குமாறும் 02 வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க தயாரெனவும் தெரிவித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழக ஆளுநருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளாார்.
தமிழக பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேக்கருக்கு இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
கேரளத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஆளுநர் இன்று(05) தமிழகத்திற்கு திரும்பவுள்ள நிலையில் விஜய்யின் இந்த கோரிக்கைக்கு அவர் விரைவில் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
எனினும், ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை பலமான 118 இடங்களை பெறாததால், தமிழகத்தில் தற்போது 'தொங்கு சட்டப்பேரவை’ அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆட்சியமைப்பதற்கு இன்னும் 10 இடங்கள் தேவைப்படுவதால், கட்சிகளிடம் ஆதரவு கோருவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக த ஹிந்து தமிழ் செய்தி வௌியிட்டுள்ளது.
அதிமுகவின் ஆதரவை கோருதல் அல்லது காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிளை உள்ளடக்கிய திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை கோருதல் என இரண்டு வாய்ப்புகள் தவெகவுக்கு தற்போது காணப்படுகின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தொலைபேசி வாயிலாக விஜய்யை தொடர்புகொண்டு தனது ஆதரவை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
இந்த தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மக்கள் நலனையும் மாநில முன்னேற்றத்தையும் முன்னிலைப்படுத்தி செயற்படுவார் என்ற நம்பிக்கை காணப்படுவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
‘தமிழ்நாட்டு மக்களின் ஜனநாயகத் தீர்ப்பை முழு மரியாதையுடன் ஏற்றுக்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டால், மாநில நிர்வாக குழு கூடிய ஆலோசனை நடத்தப்படுமென இடதுசாரி கட்சிகள் தெரிவித்துள்ளன.
தேர்தலுக்கு முன்னர், கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவந்த நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு ‘'ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு’' என தவெக தலைவர் விஜய் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
1967ஆம் ஆண்டுக்கு பின்னர் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளின் ஆட்சியே தமிழகத்தில் நடைபெற்றுவந்த நிலையில் இம்முறை தேர்தல் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
“1967, 1977 சட்டப்பேரவை தேர்தல்களை போன்று 2026 சட்டப்பேரவை தேர்தலும் தமிழகத்தில் புரட்சிக்கு வழிவகுக்கும்” என தவெகவின் இரண்டாம் ஆண்டு ஸ்தாபக விழாவின் போது விஜய் தெரிவித்திருந்தார்.
அவர் கணித்தது போன்று இம்முறை தமிழக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை, தமிழக முதலமைச்சர் பதவியை மு.க.ஸ்டாலின் இராஜினாமா செய்துள்ளார்.
தமது இராஜினாமா கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு அவர் அனுப்பிவைத்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி 73 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு சிறந்த எதிர்க்கட்சியாக செயற்படவுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இம்முறை தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆளும் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணி 73 தொகுதிகளிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
இம்முறை தேர்தலில் மற்றுமொரு முக்கிய வேட்பாளராக இருந்த சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி சுமார் 4 வீத வாக்குகளை பெற்றுள்ள போதும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதுடன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்தார்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார்.
மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டாலும், எடப்பாடி கே.பழனிசாமி தனது தொகுதியை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
பா.ஜ.க ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.
