சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று(03)

சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று(03)

by Staff Writer 03-05-2026 | 4:05 PM

Colombo (News 1st) சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று(03).

"துணிச்சலான புதிய உலகில் செய்தியறிக்கை: ஊடக சுதந்திரம் மற்றும் ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம்" என்பதே இந்த வருடத்திற்கான கருப்பொருளாகும்.

இம்முறை சர்வதேச ஊடக சுதந்திர தினத்தின் பிரதான மாநாடு சாம்பியாவின் லுசாகா நகரில் நடைபெறுகிறது.

1993ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, மே மாதம் 03 ஆம் திகதி "சர்வதேச ஊடக சுதந்திர தினமாக" பிரகடனப்படுத்தப்பட்டது.

கொலம்பிய பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ 1986 டிசம்பர் 17ஆம் திகதி அவரது அலுவலகத்திற்கு முன்பாக படுகொலை செய்யப்பட்டார்.

இதற்கு பின்னரே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான கருத்தாடல் உலகம் முழுவதும் வலுப்பெற்றது.

உலகெங்கிலும் உள்ள ஊடகவியலாளர்கள் உயிர் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் அன்றாட நிகழ்வுகள் மற்றும் பல்வேறு கடினமான சூழ்நிலைகளை அறிக்கையிடுவதன் மூலம் பரந்த சமூகப்பொறுப்பை நிறைவேற்றுகின்றனர்.

2022 - 2025 காலப்பகுதிக்கான யுனெஸ்கோ அறிக்கைக்கு அமைய சர்வதேச அளவில் 2012ஆம் ஆண்டிலிருந்து ஊடக சுதந்திரமானது மிக மோசமான வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தண்டனை அல்லது துன்புறுத்தல்களுக்கு அஞ்சி ஊடகவியலாளர்கள் தங்களது கருத்து சுதந்திரத்தை தாமாகவே கட்டுப்படுத்திக் கொள்வதே இந்த வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் ஊடக சுதந்திரத்திற்காக ஒட்டுமொத்த சமூகமும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியது அவசியமாகும்.