.webp)

Colombo (News 1st) கிரேக்க பிணைமுறி(Greek Bonds) வழக்கின் நிபந்தனைகளை மீறியமைக்காக, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக தாக்கல் செய்யப்படவுள்ள வழக்கை விசாரணை செய்வதற்காக மூவரடங்கிய நிரந்தர விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு அமைய, பிரதம நீதியரசரினால் இந்த குழாம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதிகளான மனோஜ் தல்கொடபிட்டிய, உதேஷ் ரணதுங்க மற்றும் புத்திக ஸ்ரீ ராகல ஆகியோர் இதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிரேக்க பிணைமுறி வழக்கின் இணக்கப்பாட்டின் படி, அஜித் நிவாட் கப்ரால் செலுத்த வேண்டிய 184 கோடி ரூபாவிற்கும் அதிக தொகை இதுவரை செலுத்தப்படவில்லை.
கிரேக்க நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியிருந்த போது, அதனை அறிந்திருந்தும் கிரேக்க அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட பிணைமுறிகளை கொள்வனவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 184 கோடி ரூபாவிற்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்தது.
இதன்போது அஜித் நிவாட் கப்ரால், முன்னாள் பிரதி ஆளுநர் தர்மசேன தீரசிங்க, உதவி ஆளுநர்களான தொன் வசந்த ஆனந்த சில்வா மற்றும் எம்.ஏ.கருணாரத்ன ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
2025 டிசம்பர் 10ஆம் திகதி முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை நிபந்தனையுடனும் ஏனைய 03 பிரதிவாதிகளையும் நிபந்தனையின்றியும் விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கப்ரால் விடுவிக்கப்பட்ட நிபந்தனையின் படி, அந்த கொடுக்கல் - வாங்கலினால் ஏற்பட்ட 184 கோடி ரூபாவிற்கும் அதிக நட்டத்தை 03 மாதங்களுக்குள் இலங்கை மத்திய வங்கியில் வைப்பிலிட வேண்டுமென குறிப்பிடப்பட்டது.
எவ்வாறாயினும், அந்த கால அவகாசம் கடந்த மார்ச் 10ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
இதனை தொடர்ந்தே விசாரணைக்காக நிரந்தர விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய குழாத்தை நியமிக்குமாறு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு, பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
