சாரா ஜாஸ்மினுக்கு நடந்தது என்ன?

by Staff Writer 27-04-2026 | 10:13 PM

Colombo (News 1st) 278 பேரை கொலை செய்து, மேலும் 500-இற்கும் மேற்பட்டோரை அங்கவீனராக்கிய 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான பாரதூரமான தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்திய குழுவிலிருந்த சாரா ஜாஸ்மின் என்றழைக்கப்படும் புலஸ்தினி தொடர்பான உண்மை தகவல்களை மறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பில் இன்று நாம் தகவல்களை வௌிப்படுத்துகின்றோம்.

குற்றப் புலனாய்வு திணைக்களம் தற்போது முன்னெடுத்து வரும் விரிவான விசாரணைகளின் அடிப்படையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களே இந்த வௌிக்கொணர்விற்கு அடிப்படையாக அமைந்துள்ளன.

சாரா ஜாஸ்மின், கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியான் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய முஹம்மது ஹஸ்தூனின் மனைவியாவார்.

இந்த பயங்கரவாத செயலில் சாரா செயற்பாட்டு ரீதியில் பங்கெடுத்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த மிலேச்சத்தனமான பயங்கரவாத செயலின் முழுமையான பின்னணி தொடர்பில் அவர் முக்கிய சாட்சியாளராக கருதப்படுகிறார்.

எவ்வாறாயினும், கடந்த 07 ஆண்டுகளாக சாரா உயிரோடு இருக்கிறாரா, இல்லையா? என்பது பெரும் விவாதத்திற்குரிய விடயமாகவே இருந்து வருகிறது.

தற்போது படிப்படியாக அவிழ்க்கப்படுகின்ற இந்த மர்ம முடிச்சுகள் தொடர்பில் வௌிவரும் சில தகவல்கள் இதோ..

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் 2019 ஏப்ரல் 26ஆம் திகதி பாதுகாப்பு தரப்பினர், அம்பாறை சாய்ந்தமருது பகுதியில் உள்ள சஹ்ரானின் வீட்டை சுற்றிவளைத்தனர்.

இந்த இடத்திலேயே சஹ்ரான் ஹஷீமின் சகோதரர் முஹம்மது ரில்வான் குண்டை வெடிக்கச் செய்தார்.

இங்கு பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்ததாக பின்னர் அறிவிக்கப்பட்டது.

குண்டு வெடிக்கச் செய்யப்பட்ட இடத்தில் சாரா இருந்தாரா? 

அவ்வாரென்றால் சாரா உயிரிழந்து விட்டாரா, அல்லது தப்பிச் சென்றாரா?

தாக்குதலின் பின்னர் இரண்டு தடவைகள் நடத்தப்பட்ட மரபணு பரிசோதனைகளில் சாரா உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்படவில்லை.

எனினும், 2022 ஏப்ரல் 27ஆம் திகதி இதுபோன்றதோர் நாளில் மீண்டும் மரபணு பரிசோதனை நடத்துவதற்காக சாய்ந்தமருதில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்கள் மீளவும் தோண்டியெடுக்கப்பட்டன.

அடையாளம் தெரியாத எலும்புத்துண்டுகள் அடங்கிய பையிலிருந்த 02 எலும்புகள், சாராவின் தாயாரின் மகள் ஒருவருடையது என மரபணு பரிசோதனையில் உறுதியானதாக அப்போதைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும் அவை சாரா ஜாஸ்மினுடையவை என உறுதியாகக் கூறப்படவில்லை.

பின்னர் 2023 மார்ச் மாதம் குற்றப் புலனாய்வு விசாரணைகளை முன்னெடுத்த குழுவினர் அறிக்கை வௌியிட்டனர்.

2019 ஏப்ரல் 26ஆம் திகதி சாய்ந்தமருதில் உயிரிழந்தவர்களில் சாரா ஜாஸ்மினும் ஒருவர் என்பதை அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களம் வெளியிட்ட அறிக்கை உறுதிப்படுத்துவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சாராவின் தாயிடமிருந்து பெறப்பட்ட மரபணு மாதிரிகளுடன், குற்றச் சம்பவம் நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட சில எலும்புத்துண்டுகளின் மரபணுக்களின் மாதிரிகள் ஒத்துப்போவதாகவும் அது தாய் மற்றும் பிள்ளைக்கு இடையிலான உயிரியல் உறவை உறுதிப்படுத்தும் முடிவாகும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை மேற்கொள்காட்டி குற்றப் புலனாய்வு திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில், இந்த மாதிரிகள் 99.9999 வீதம் ஒத்துப்போவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குறித்த மரபணு பரிசோதனைகள் சந்தேகத்திற்குரியவை என 2025ஆம் ஆண்டில் இந்த விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்தது.

சாய்ந்தமருது குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிப் பிரயோகங்களுக்கு பின்னர் முழு பிரதேசமும் நிசப்தம் அடைந்ததாக விசாரணைகளின் போது சாட்சியமளித்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தலைமை பொலிஸ் இன்ஸ்பக்டர் ஒருவர் கூறியிருந்தார்.

அந்த இடத்திலிருந்து மோட்டார் சைக்கிளொன்று புறப்பட்டுச் செல்லும் சத்தம் தௌிவாக கேட்டதாக சாட்சியாளர் வௌிப்படுத்தியுள்ளார்.

குறித்த மோட்டார் சைக்கிள் சத்தம் தமக்கும் கேட்டதாக பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் வழங்கிய மற்றுமொரு சாட்சியத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சஹ்ரானின் குடும்பத்தவர்கள் சாய்ந்தமருதில் உள்ள இந்த வீட்டிற்கு செல்வதற்காக வேன் மற்றும் 02 மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தியிருந்ததாக தகவல் கிடைத்தாலும் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றபோது அங்கு ஒரு மோட்டார் சைக்கிள் மாத்திரமே இருந்ததாக பொலிஸ் அத்தியட்சகர் சாட்சியமளித்திருந்தார்.

சாரா ஜாஸ்மினின் உடல் ஆவியாகிப்போகும் அளவிற்கு ஒரு பாரிய வெடிப்பு சாய்ந்தமருது வீட்டிற்குள் இடம்பெற்றிருக்கவில்லை என பதுளை குற்றத்தடயவியல் ஆய்வகத்தின் அப்போதைய தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர் தெரிவித்திருந்தார்.

குண்டுவெடிப்பின் பின்னர் சாரா கல்முனை நகருக்கு சென்று பின்னர் மட்டக்களப்பு வெல்லாவெளியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று, பின்னர் மாங்காட்டில் இருந்து மன்னாருக்கு சென்று அங்கிருந்து கடல் வழியாகத் தப்பிச்சென்றதாக பொலிஸ் விசேட பணியகத்தின் புலனாய்வு அதிகாரி ஒருவரின் சாட்சியத்தில் வௌிக்கொணரப்பட்டிருந்தது.

சாரா ஜாஸ்மினுக்கு என்ன நடந்தது?

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கடந்த வருடம் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

அமைச்சர் ஆனந்த விஜேபால
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
2025/07/09

சஹ்ரானின் குழுவில் இருந்த முக்கிய உறுப்பினரான சாரா ஜாஸ்மின் என்றழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் 2019.04.26ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பில் உயிரிழந்ததாகக் கூறப்படுவது குறித்து இரு சந்தர்ப்பங்களில் DNA அறிக்கைகள் கோரப்பட்டிருந்தன. இது குறித்தும் இங்கே பேசப்பட்டது. இரு சந்தர்ப்பங்களில் DNA அறிக்கைகள் கோரப்பட்டன. அந்த DNA அறிக்கைகள் சாரா ஜாஸ்மினின் நெருங்கிய உறவினர்களுடன் பொருந்தவில்லை. இரு சந்தர்ப்பங்களிலும் அவை பொருந்தவில்லை. அதன்பின்னர், மூன்றாவது சந்தர்ப்பத்தில் சாரா ஜாஸ்மினின் தாயின் DNA அறிக்கையுடன் அது ஒத்துப்போயுள்ளது. அந்த நேரத்தில் அப்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, அந்த DNA அறிக்கையைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பித்த மாதிரிகள் மற்றும் அந்த முழுமையான செயற்பாடுகள் குறித்து பாரிய சந்தேகம் இப்போது எழுந்துள்ளது. இரு சந்தர்ப்பங்களில் இந்த DNA அறிக்கைகள் நிராகரிக்கப்பட்டன, அவை பொருந்தவில்லை. ஆனால் மூன்றாவது தடவையில் அவை பொருந்தியுள்ளன. இந்த ஒட்டுமொத்த செயன்முறை குறித்தும் தற்போது பலத்த சந்தேகம் எழுந்துள்ளது