சமாதான தீவில் சமாதான பாதயாத்திரை ஆரம்பம்

சமாதான தீவில் சமாதான பாதயாத்திரை ஆரம்பமானது..

by Staff Writer 22-04-2026 | 3:02 PM

Colombo (News 1st) சமாதான தீவில் சமாதான பாதயாத்திரை ரங்கிரி தம்புள்ளை ரஜமஹா விகாரையிலிருந்து இன்று(22) காலை ஆரம்பமானது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் கோரிக்கைக்கு இணங்க நடத்தப்படும் இந்த சர்வதேச சமாதான பாதயாத்திரையின் முழுமையான ஒருங்கிணைப்பு பணிகளை சிரச ஊடக வலையமைப்பு முன்னெடுக்கின்றது.

சமாதான பாதயாத்திரை ஆரம்பமாகுவதற்கு முன்னதாக வியட்நாமின் பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் ரஜமஹா விகாரையில் மத வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர், டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ, புத்தசாசன, சமய, கலாசார விவகார பிரதியமைச்சர் கமகெதர திசாநாயக்க உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் சமாதான தீவில் - சமாதான பாதயாத்திரை இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்த சமாதான பாதயாத்திரை மாத்தளை அலுவிஹாரை வரை இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

மாத்தளை அலுவிஹாரையிலிருந்து நாளை(23) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள பாதயாத்திரை, கண்டி ஸ்ரீ தலதா மாளிகையை சென்றடையவுள்ளது.

நாளை மறுதினம்(24) கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இருந்து ஆரம்பிக்கும் சமாதான தீவில் சமாதான பாதயாத்திரை கேகாலை பெலிகம்மன ரஜமஹா விகாரையில் நிறைவடையவுள்ளது.

எதிர்வரும் 25ஆம் திகதி பெலிகம்மன ரஜமகா விகாரையிலிருந்து ஆரம்பமாகும் பாதயாத்திரை தோலங்கமுவ மத்திய கல்லூரியை சென்றடையவுள்ளது.